வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-''தமிழகத்தின் மின் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்யும் நெய்வேலி நிலக்கரி சுரங்க பிரச்னையை, அரசியல் கட்சியினர், பொறுப்புடன் அணுக வேண்டும்,'' என, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுரை கூறினார்.
![]()
|
சட்டசபையில் நேற்று, நெய்வேலி நிலக்கரி சுரங்க நிலம் எடுப்பு பிரச்னை தொடர்பாக, பல்வேறு கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு, அவர் அளித்த பதில்:
நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் கையிருப்பில் உள்ள நிலம், வருங்கால மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. இதனால், புதிதாக நிலங்களை கையகப்படுத்தி, நிலக்கரி எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
நிலம் எடுப்பு தொடர்பாக, 2022 ஆக., மாதம் முதல் பல்வேறு நிலைகளில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. நிலங்களை வழங்குபவர்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பு, அதிக இழப்பீடு, மறுவாழ்வு பலன்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில், 1,711 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கான தேர்வில், நிலம் வழங்கியவர்களுக்கு 20 மதிப்பெண் கூடுதலாக வழங்கப்பட்டு, முன்னுரிமை அளிக்கப்படும்.
சங்கத்தின் வாயிலாக பணியாளர்களை நியமிக்கவும், நிலக்கரி சுரங்க நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இழப்பீட்டுத் தொகை, ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
முதல்வர், இப்பிரச்னையில் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி வருகிறார். சுமுகமான முறையில் தீர்வு காண்பதற்கு, அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
![]()
|
சேத்தியாதோப்பில் 61 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த இருப்பதாக சொல்வதில், அடிப்படை ஆதாரம் இல்லை. அது அரசின் கவனத்திற்கும் வரவில்லை. தேவை இருந்தால் மட்டுமே, நிலம் கையகப்படுத்தப்படும்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் வாயிலாக, தமிழகத்தின் மின் தேவை பெருமளவில் பூர்த்தி செய்யப்படுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மின் தேவை அதிகளவில் உள்ளது. எனவே, தமிழகத்தின் மின் தேவையை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வுடன், இப்பிரச்னையை அனைத்து அரசியல் கட்சிகளும் அணுக வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement