சென்னை:''தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு 30 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியே காரணம்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி கூறினார்.
சட்டசபையில் நேற்று, பட்ஜெட் மீதான விவாதத்தில், அவர் பேசியதாவது:
கார்நாடக மாநிலம் பெங்களூருவை ஒட்டியுள்ளதால், ஓசூரை சுற்றி தான் தொழிற்சாலைகள் துவங்கப்படுகின்றன. இனி புதிதாக வரும் தொழிற்சாலைகளை, தர்மபுரி மாவட்டத்தில் அமைக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில், விவசாயத்திற்காக மட்டும் 56 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் முக்கியமான வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
'அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்குவோம்' எனக் கூறி ஆட்சிக்கு வந்து விட்டு, 'தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே' என அறிவித்திருப்பது சரியல்ல.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற அ.தி.மு.க., தலைவர்கள் முதல்வர்களாக இருந்த போது தான் பல்வேறு சமூக நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. உயர் கல்வியில் இன்று தமிழகம் படைத்திருக்கும் சாதனைக்கு, அ.தி.மு.க., ஆட்சியே காரணம்.
பொதுவாக நிதி அமைச்சர்களாக இருப்பவர்கள், சிக்கனத்தை வலியுறுத்துவர். அதையும் மீறிதான், எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதனால் தான், கிராமப் புறங்களில் இருப்பவர்கள் எல்லாம் பள்ளிக்கு வந்தனர். தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு, 30 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியே காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி, பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். அதற்கு, நிதியமைச்சர் தியாகராஜன், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, உயர் கல்வி அமைச்சர் பொன்முடி, பொதுப்பணி துறை அமைச்சர் வேலு ஆகியோர், பதில் அளித்தனர்.
நேரம் முடிந்து விட்டதால், பேச்சை முடிக்குமாறு சபாநாயகர் அப்பாவு கேட்டுக் கொண்டார். அப்போது, ''நான் தி.மு.க., அரசை எதிர்த்து தான் ஆக வேண்டும். எங்களை எதிர்த்ததால் தான், நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். உங்களை எதிர்த்தால் தான், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்,'' என, அமைச்சர்களை பார்த்து, முனுசாமி பேசினார்.