சென்னை:''தேரோடும் வீதிகளில், பூமிக்கடியில் மின்கேபிள்களை புதைக்கும் பணிகள், முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்,'' என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:
ராஜகுமார் - காங்.,: புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால், மயிலாடுதுறை நகராட்சி பாதிக்கப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் உள்ளது போல, இங்கும் மின்கேபிள்களை பூமிக்கடியில் எடுத்து செல்ல வேண்டும்.
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி: சென்னையில் பெரம்பூர், ஆவடி ஆகிய பகுதிகளில் பூமிக்கடியில் கேபிள்கள் புதைக்கும் பணி நடக்கிறது. தாம்பரம், அடையாறு கோட்டங்களில் பணி துவங்க உள்ளது. ஏழு கோட்டங்களில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பணிகள் முடிந்தபின் முன்னுரிமை அடிப்படையில், மற்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
நீலமேகம் - தி.மு.க.,: தஞ்சாவூர் ராஜ வீதிகளில், பழமையான மின்கம்பங்கள் உள்ளன. தேரோட்டம் நடக்க வசதியாக அவற்றை பூமிக்கடியில் மாற்ற வேண்டும்.
செந்தில்பாலாஜி: நான்கு கோவில்களில் மின்கேபிள்களை பூமிக்கடியில் எடுத்துச் செல்ல திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. நிர்வாக அனுமதி கிடைத்ததும் இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேல்முருகன் - த.வா.க.,: தேர் செல்லும் பாதைகளில் மின்கேபிள்களை பூமிக்கடியில் மாற்றி அமைக்க வேண்டும்.
செந்தில்பாலாஜி: தேரோடும் வீதிகளில் மின்கம்பங்களை மாற்ற துறை ரீதியாக ஆய்வு செய்யப்படும். நான்கு கோவில்களில் ஏற்கனவே பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள கோவில்களில், முன்னுரிமை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள பரிசீலிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.