சென்னை:''எல்லா அமைச்சர்களும் 'நோட்' பண்ணிருக்கோம்; யாராவது ஒருத்தர் பாலம் கட்டித் தந்துருவோம்,'' என, பெண் எம்.எல்.ஏ., கேள்விக்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - மரகதம் குமரவேல்: மதுராந்தகம் தொகுதியில் வள்ளிபுரம் ஊராட்சிக்கு செல்லும் சாலையில், மிகவும் பழமையான பாலம் உள்ளது. மதுராந்தகத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்வதற்கு, இந்த சாலையைதான் பயன்படுத்த வேண்டியுள்ளது. வெள்ள காலங்களில் பாலம் அரிக்கப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.
இதனால், மதுராந்தகம் செல்பவர்கள் செங்கல்பட்டைச் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. அவ்வப்போது, இந்த பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது. நிரந்தரமாக பாலம் கட்டுவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: இந்த கதை மிகவும் சோகமாக இருக்கிறது. பாலம் கட்டுவதற்கு பல துறைகள் உள்ளன. இது பஞ்சாயத்து பாலமா, நெடுஞ்சாலைத் துறை பாலமா, நீர்வளத் துறை பாலமா என்பதை சொல்லவில்லை. இந்த பிரச்னை முக்கியமானது.
இந்த கோரிக்கையை சபையில் உள்ள எல்லா அமைச்சர்களும் 'நோட்' பண்ணி விட்டோம்; யாராவது ஒருவர் பாலம் கட்டி கொடுத்து விடுவோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.