நாமக்கல்--நாமக்கல் பூங்கா சாலையில், மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், இடைநிலை ஆசிரியர், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 2003ம் ஆண்டுக்கு பின் அரசு பணியில் சேர்ந்தோருக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உறுதியளித்தபடி உடனே அமல்படுத்த வேண்டும்.
அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் தொழில்நுட்ப உதவியாளர்கள், ஊர்தி ஓட்டுனர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியை நிலுவை இல்லாமல் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொருளாளர் முருக செல்வராசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் தமிழ்மணி, ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழனியப்பன், சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.