நாமக்கல்,-நாமக்கல் பகுதியில், பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த, நால்வரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகன் காளியப்பன்; மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பண மோசடி குறித்து புகார் அளித்திருந்தார். அதில், நாமக்கல் கணேசபுரத்தை சேர்ந்த சின்னு மகன் செந்தில்குமார்; இவர் நாமக்கல் துறையூர் சாலையில், நிதி நிறுவனம் நடத்தி வந்ததாகவும், முதலீட்டாளர்களுக்கு, 6 முதல் 60 சதவீதம் போனஸ் தருவதாகவும் கூறியதையடுத்து கடந்த, 2018 முதல் 2019 ஆண்டுக்குள் தனது உறவினர்களிடம் பணம் பெற்று, 12 லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய் முதலீடு
செய்துள்ளார்.
இதில், போனஸ் தொகையாக, 6 லட்சத்து, 30 ஆயிரத்து, 41 ரூபாய் போனஸ் மட்டும் வழங்கியதாகவும் மற்ற தொகையை தராமல் ஏமாற்றியுள்ளனர் என, புகார் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்த குற்றப்பிரிவு போலீசார், செந்தில்குமார் மற்றுமின்றி அழகர், ராமச்சந்திரன், தேவி, மணி, சசிகலா, கார்த்திக், கனகா, ஆறுமுகம், பிரபாகரன் உள்ளிட்டோர் சேர்ந்து குறிப்பிட்ட நிதி நிறுவனத்தை நடத்தியதும்; இதில், 164 முதலீட்டாளர்களிடம் இருந்து, 6 கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்திருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து தனிப்படை அமைத்து அனைவரையும் போலீசார் தேடிவந்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய கார்த்திக், கனகா, ஆறுமுகம், பிரபாகரன் ஆகிய நால்வரை, நேற்று கைது செய்தனர்.