குளித்தலை,-குளித்தலை நகராட்சி தற்காலிக பஸ் ஸ்டாண்டை, 74 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணி, நடந்து வருகிறது. இப்பணிகளுக்காக பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளை உரிமையாளர்கள் தாங்களாகவே அகற்றி கொள்வதற்கான அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் ஸ்டாண்டில் நகராட்சி நிர்வாகத்தின், நேரடி கட்டுப்பாட்டில் 20 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிக்கு இடையூறாக இருக்கும் 20 கடைகளை, அப்புறப்படுத்திக்கொள்ள, கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், 'மார்ச் 24ம் தேதிக்குள், கடைகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும், மேம்பாட்டு பணிகள் முடிந்த பிறகு, அனைவருக்கும் மீண்டும் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்' என குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில், கடைக்காரர்கள் யாரும் கடையை அகற்றிக்கொள்ளவில்லை.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மனோகரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: குளித்தலை தற்காலிக பஸ் ஸ்டாண்டில் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க, 20 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேற்றுடன் அவகாசம் முடிந்தது. இருப்பினும், கடைக்காரர்கள் பாதிக்காத வகையில் அவர்களாகவே கடைகளை அகற்றிக்கொள்ள, கூடுதல் அவகாசம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.