குளித்தலை,-குளித்தலையை அடுத்த, வெள்ளப்பட்டி பஞ்., வேலாயுதம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி பரிமளம், 39. கூலி தொழிலாளி. இவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றார். இந்த நிறுவனத்தில், லாலாப்பேட்டை, கொடிக்கால் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன், 27, கடன் தொகை வசூலிக்கும் வேலை செய்து வந்தார்.
கடந்த 21ம் தேதி, கடன் தொகையை வசூல் செய்ய சென்றபோது, பரிமளா, தனது கணவர் பணம் எடுக்க வங்கிக்கு சென்றுள்ளார். வந்ததும் பணம் செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து, ரவிச்சந்திரன், பணம் கேட்டபோது, தன் கணவர் இன்னும் வரவில்லை, வந்தவுடன் கட்டி விடுகிறேன் என கூறினார்.
அப்போது, நிதி நிறுவன ஊழியர் ரவிச்சந்திரன், பரிமளாவை, தகாத வார்த்தையால் திட்டி, தாக்கி, கீழே தள்ளிவிட்டார். இதில், பாதிக்கப்பட்ட பரிமளா, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பரிமளா கொடுத்த புகாரின் படி, தோகைமலை போலீசார், ரவிச்சந்திரன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.