கிருஷ்ணராயபுரம்,-வரகூர் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது குறித்த அமைதி பேச்சுவார்த்தை, கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் மோகன்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
வரகூர் மாரியம்மன் கோவில் திருவிழா, வரும் 26 (நாளை) முதல் 28 வரை நடக்கிறது. இதில் வரகூர், மேட்டுப்பட்டி, என்.உடையாப்பட்டி, குழந்தைப்பட்டி, முத்துகுமரம்பட்டி ஆகிய கிராம மக்கள் சேர்ந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
விழாவில், ஒலி பெருக்கி அமைக்க, அனுமதி கோரி, மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மோகன் ராஜ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், திருவிழா நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. திருவிழாவில், சாதியை பிரதிபலிக்கும் பிளக்ஸ் பேனர்கள், கொடிகள், உடைகள் மற்றும் எதையும் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மண்டல துணை தாசில்தார் இந்துமதி, லாலாப் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி, வருவாய்த்துறை அலுவலர் கள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.