காகித ஆலை குறித்து அமைதி பேச்சுவார்த்தை
கோபி,-காகித ஆலை குறித்து கோபி ஆர்.டி.ஓ., தலைமையில், அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
கோபி அருகே தண்ணீர்பந்தல்புதுாரில் இயங்கிய, தனியார் காகித ஆலை நிர்வாகம், கழிவுநீரை வெளியேற்றியதால், பாசன கிணறுகள் முதல், விளை நிலங்கள் வரை மாசடைவதாக, அப்பகுதியினர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகார் தெரிவித்தனர். அத்துறையினர் ஆய்வு செய்து, ஆலை மின் இணைப்பை சில மாதங்களுக்கு முன் துண்டித்தனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி, மின் இணைப்பு வழங்க வந்த அதிகாரிகளுக்கு, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பான இரு தரப்பு அமைதி பேச்சுவார்த்தை, கோபி சப்- கலெக்டர் ஆபீசில், ஆர்.டி.ஓ., திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நேற்று மாலை நடந்தது. இதில் நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை, இருதரப்பினரும் அமைதி காண வேண்டும், என ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார். இதையடுத்து பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
காங்கேயம்-திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் இன்று மதியம், 12:00 மணியளவில், மாவட்ட அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள் தவறாது பங்கேற்க, மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜாக்டோ--ஜியோ போராட்டம்
தாராபுரம்-ஜாக்டோ--ஜியோ அமைப்பின் சார்பில், மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. தாராபுரம், பஸ் ஸ்டாண்ட் முதல், அமராவதி சிலை ரவுண்டானா வரை கைகோர்த்து நின்றனர்.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். முடக்கப்பட்ட அகவிலைப்படி, உயர் கல்வி ஊக்க ஊதியம் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு
கோபி,-வீட்டின் பூட்டை உடைத்து, 1.50 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் களவாடி சென்றனர்.
கவுந்தப்பாடி அருகே நேரு வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி, 50; வேளாண்மைத்துறை அலுவலக ஊழியர். இவரது மனைவி தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். மதியம், 1:00 மணிக்கு, வீட்டின் பூட்டை உடைத்து, டிரஸ்சிங் டேபிள் லாக்கரில் வைத்திருந்த, 1.50 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் களவாடி சென்றனர். பழனிச்சாமி புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
பாட்னா ரயிலில் கூடுதலாக பொதுப்பெட்டி இணைப்பு
திருப்பூர்-திங்கள் மற்றும் செவ்வாய் தோறும் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் பாட்னா எக்ஸ்பிரஸ் மூன்றாம் நாளில், பாட்னா செல்கிறது. இதுவரை, 24 பெட்டிகள் இருந்தது. பீகார் மாநிலத்தவர் தொடர் வருகையால், பயணிகள் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், 27ம் தேதி முதல் கூடுதலாக ஒரு பொதுப்பெட்டி கூடுதலாக சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.