திருப்பூர்-'நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லையை உறுதி செய்து, மேம்பாட்டு பணியை விரைவில் துவக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொழில் நகரமாக விளங்கும் திருப்பூரில், ஊத்துக்குளி ரோட்டில், 340 ஏக்கர் பரப்பளவில் உள்ள நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. '181 வகை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து செல்கின்றன' என, கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
'இயற்கை எழில் கொஞ்சும்
இக்குளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும்' என, இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், கடந்தாண்டு ஏப்., மாதம், தமிழக அரசு, நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக
அறிவித்தது. இது, இயற்கை
ஆர்வலர்கள், உள்ளூர் மக்கள்
மத்தியில் வரவேற்பு பெற்றது.
இக்குளத்தையொட்டி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பினருக்கு சொந்தமான நிலமும் உள்ளது. குளத்தில் பட்டா நிலம் உள்ளதா, ஆக்கிரமிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகம் ஆராய்ந்து, ஆட்சேபனை எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த அறிக்கை சமர்பித்த பின்னரே, பறவைகள் சரணாலயம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வரும்.
இப்பணியை மேற்கொள்ள 'வனத்துறை செட்டில்மென்ட் அலுவலர்' என்ற பணியிடம் இருக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் அத்தகைய பணியிடம் இல்லாததால், கோட்ட கலால் அலுவலர் ராகவிக்கு, வனத்துறை செட்டில்மென்ட் அலுவலர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பட்டா நிலம், ஆக்கிரமிப்பு உள்ளதா, யாரேனும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனரா என்பது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது முடிந்த பின், வனத்துறை சார்பில் எல்லை உறுதி செய்யப்பட்டு, அடுத்த மேம்பாட்டு பணிகள் துவங்கும்.
இயற்கை கழக தலைவர் ரவீந்தரன் கூறுகையில்,''திருப்பூரில் பறவைகள் சரணாலயம் அமையவிருப்பது, பெரும் ஆர்வம், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாக நடைமுறை பணிகளை விரைவாக முடித்து, சரணாலய மேம்பாடு பணிகளை விரைவில் துவங்கும் என, எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.