ஓசூர்,-ஓசூரில், நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழந்த நிலையில், சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஆர்.கே., நகரை சேர்ந்தவர் பட்டாபிராமன், 55. இவரது மனைவி விசாலாட்சி, 44. இவர்களுக்கு கோகுல், 24, சாந்தகுமார், 18, என இரு மகன்கள் உள்ளனர். இளையமகன் சாந்தகுமார் பிளஸ் 2 முடித்து விட்டு, பாகலுார் சாலையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில், ஐ.ஐ.டி., பயிற்சி பெற்று வந்தார்.
நேற்று காலை பயிற்சி மையம் சென்ற சாந்தகுமார், மதியம் ஓசூர் அருகே ராயல் வெல்பிட் கிளப்பில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில், கிளப் ஊழியர் ஒருவர் போன் செய்து, உங்கள் மகன் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என, பட்டாபிராமனுக்கு மொபைல்போனில் கூறியுள்ளார்.
அவர் தனது மனைவியுடன் மருத்துவமனை சென்று பார்த்த போது, மகன் சாந்தகுமார் உயிரிழந்து கிடந்தார். நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் சாந்தகுமார் உயிரிழந்ததாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சாந்தகுமாருக்கு நன்றாக நீச்சல் தெரியும். அதனால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது தந்தை பட்டாபிராமன் அளித்த புகார்படி, ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.