கிருஷ்ணகிரி,-பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், மாதப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் தியோடர் ராபின்சன், பட்டதாரி ஆசிரியர் கழகம் நாராயணன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் குருநாதன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் பேசினர்.
2003 ஏப்., 1க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். மதிப்பூதியம், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதே போல், ஓசூர், தேன் கனிக்கோட்டை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
* அரூர் தாலுகா அலுவலகம் எதிரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ சார்பில், மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அரசு ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ரவுண்டானாவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், ஞானசேகரன், கணேசன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெகதாஅம்பிகா உள்பட பலர் பங்கேற்றனர்.