மதுரை, : மதுரை விவசாய கல்லுாரியில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு சங்கம் (பிக்கி) சார்பில் நவீன விவசாய கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கலெக்டர் அனீஷ்சேகர் துவக்கி வைத்தார்.
டீன் மகேந்திரன் வரவேற்றார். பிக்கி விவசாயம் மற்றும் உணவு மதிப்பு கூட்டுதல் துறைத்தலைவர் தலைவர் ஆர்.மகேந்திரன் பேசுகையில், மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதலில் கூடுதல் கவனம் செலுத்தினால் விவசாயம் நிரந்தர வெற்றித்தொழிலாக மாறும்'' என்றார். பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ஹரிணி, முதன்மை மேலாளர் ராம்பிரசாத் பங்கேற்றனர்.
நறுமுகை மூலிகை நாப்கின் தாரணி, எம்.ஆர்.ஜி.அக்ரோ டிரேடர்ஸ் சங்கீதா தேவானந்த், அக்னிகார்ட் சசிகுமார், ரேர் அன்ட் பியூர் ஸ்பெஷாலிட்டி நிறுவன (பி அண்ட் பி ஆர்கானிக்ஸ்) பாலதண்டாயுதபாணி, எஸ்.வி.எம்., நேச்சுரல்ஸ் அழகுப்ரியா, பார்ம் அகெய்ன் பெஞ்சமின் ராஜா ஆகியோர் விவசாய 'ஸ்டார்ட்அப்' தொழில்முனைவோர் விருதுபெற்றனர். சங்க ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் நன்றி கூறினார். உழவியல் துறைத்தலைவர் துரைசிங் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இன்றும், நாளையும் (மார்ச் 25, 26) காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை கண்காட்சி நடக்கிறது. நவீன அறுவடை இயந்திரம், டிராக்டர், விவசாய கருவிகள், புதிய தொழில்நுட்பங்கள், சொட்டு நீர்ப்பாசனம், மதிப்பு கூட்டிய விவசாய மற்றும் உணவுப் பொருட்கள், மூலிகை நர்சரி, விதை மாதிரி, இயற்கை தின்பண்டங்கள் இடம்பெற்றுள்ளன. அனுமதி இலவசம்.