பெரியகுளம், : பெரியகுளம் நகராட்சி கூட்டத்தில் சோத்துப்பாறை அணை நீரை மாசுபடுத்தி,செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது குறித்து கமிஷனர் விளக்கம் அளிக்காததால் அவரது அறை முன் தி.மு.க., கூட்டணி கட்சியின் கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் சுமிதா (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. கமிஷனர் புனிதன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பேசியதாவது:
சோத்துப்பாறை குடிநீர் மாசுபட்டு செயற்கையாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது குறித்து அ.தி.மு.க. கவுன்சிலர் சண்முகசுந்தரம் பேசினார். இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் சண்முகசுந்தரம் தலைமையில் 4 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நகராட்சி தலைவரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
மதன்குமார் (மார்க்., கம்யூ): சோத்துப்பாறை அணையில் செயற்கையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.கமிஷனர் அணையை ஆய்வு செய்தீர்களா என்றார்.
வெங்கடேசன் (அ.ம.மு.க.,): மக்களிடம் 95 சதவீத வரி வசூல் செய்து அதிகாரிகளிடம் நற்பெயர் வாங்கிய கமிஷனர் புனிதன், அதற்கு காரணமான மக்களுக்கு குடிநீர் பிரச்னையை ஏன் உடனடியாக தீர்வு காணவில்லை.
இதே கருத்தை வலியுறுத்தி தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் குடிநீர் பற்றாக்குறை ஏழு நாட்கள் ஏற்பட்டது. கமிஷனர் அணையை ஆய்வு செய்தாரா? ஏன் நடவடிக்கையும் எடுக்கவில்லை இதற்கு கமிஷனர் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். கவுன்சிலர்கள் பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் கமிஷனர் புனிதன் 10 நிமிடத்தில் வருவதாக கூறிவிட்டு கூட்ட அரங்கைவிட்டு வெளியேறினார்.
இவரை தொடர்ந்து மேலாளர், அனைத்து அலுவலர்களும் வெளியேறினர்.
நகராட்சி தலைவர், அலைபேசியில் கமிஷனரை அழைத்தும் வர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க., பா.ம.க., மார்க்சிஸ்ட், வி.சி., கட்சி கவுன்சிலர்கள், கமிஷனர் கூட்டத்திற்கு வரவேண்டும் என மேஜையை தட்டினர்.
கமிஷனர் வராவிட்டால் நடவடிக்கை எடுக்க கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து இவர்கள் கமிஷனர் அறை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அங்கு வந்த நகராட்சி தலைவர் ஆர்ப்பாட்டத்தை கைவிடுங்கள் என வலியுத்தியதால் எழுந்து சென்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகராட்சி கூட்டம் ரத்தானது. தீர்மானங்கள் நிறைவேற்றவில்லை.