போடி : போடி நகராட்சியில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் துப்புரவு பணியாளருக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
போடி நகராட்சி 33 வார்டுகளில் 30 க்கும் மேற்பட்டோர் நிரந்தர துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகின்றனர். இங்கு 220 துப்புரவு பணியாளர்கள் தனியார் ஒப்பந்தத்தில் பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த பணியாளர்களுக்கு தினமும் ரூ.386 சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.44 வீதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் போக மாத சம்பளமாக வழங்கப்பட்டு வந்தன.
கடந்த பிப்., பணிக்கான சம்பளம் தற்போது வரை வழங்க வில்லை. இதோடு பி.எப்.,பிற்காக பிடித்தம் செய்த பணத்தை 12 ஆண்டுகளாக வழங்கவில்லை. கடந்த மாதம் வேலை செய்த சம்பளம், பிடித்தம் செய்த தொகை வழங்கப்படாத கண்டித்து நேற்று பணிகள் செய்யாமல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட முடிவு செய்தனர். ஒப்பந்தகாரர் பேச்சுவார்த்தை நடத்தியதில் நிலுவை சம்பளம் உடனே வழங்கப்படும் என கூறியதன் பேரில் துப்புரவு பணியாளர்கள் பணிக்கு திரும்ப சென்றனர்.
கடந்த மாத சம்பளம், பி.எப்., தொகை உரிய நாளில் வழங்காவிட்டால் போடி நகராட்சி பகுதியில் துப்புரவு பணியை புறக்கணித்து நகராட்சி முன் போராட முடிவு செய்துள்ளோம் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.