சிவகங்கை, : திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் மார்ச் 27ல் நடக்கும் கும்பாபிேஷக விழாவில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்களுக்கு 'ட்ரோன்' மூலம் புனித நீர் தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமானுஜர் பாடல் பெற்ற தலமான திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிேஷக விழா மார்ச் 23 அன்று முதல் காய யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மார்ச் 27 வரை எட்டு கால யாகசாலை பூஜை நடக்கும்.
மார்ச் 27 அன்று காலை 9:38 முதல் 10:30 மணி வரை கடம்புறப்பாடுடன், பட்டாச்சார்யார்கள் ராஜகோபுரம், சவுமிய நாராயண பெருமாள், தாயார் சன்னதிகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர்.
ராமநாதபுரம் டி.ஐ.ஜி., துரை தலைமையில் சிவகங்கை எஸ்.பி., செல்வராஜ், திருப்புத்துார் டி.எஸ்.பி., ஆத்மநாதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருவோர் பட்டமங்கலம், சுள்ளங்குடி, என்.வைரவன்பட்டி விலக்கு அருகே வாகனங்களை நிறுத்திவிட்டு, நடந்தே கோயிலுக்கு வரவேண்டும்.
'ட்ரோன்' மூலம் கும்பாபிேஷக புனித நீர் தெளிக்க தேவஸ்தானம், போலீஸ் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.