தேனி, : தேனி பங்களாமேடு, பெரியகுளம் ஆர்.எம்.டி.சி., டிப்போ, ஆண்டிபட்டி, போடியில் தாசில்தார் அலுவலகம், உத்தமபாளையத்தில் பைபாஸ் ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில், 'அரசு ஊழியர், அரசுப் பணியாளர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஜாக்டோ ஜியோ சார்பில், வாழ்வாதார உரிமை மீட்பு மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனியில் நடந்த மனிதசங்கிலி ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜூதீன் தலைமை வகித்தார். பிற இடங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்லத்துரை, பவானி, ராஜவேல், காதர் முகமதுமஸ்தான், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், இடைநிலை ஆசிரியர் சங்கம், உட்பட ஏராளமான ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பிற அரசுத்துறை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை - முதுநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆண்டிபட்டியில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
போராட்டத்தை விளக்கி உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் மோகன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன் ஆகியோர் பேசினர்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தமிழ்பரமன் நன்றி கூறினார். 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.