மது விற்ற 11 பேர் கைது
கரூர்,-கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது விற்றதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் வெள்ளியணை, மாயனுார், தோகைமலை, லாலாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சட்ட விரோதமாக மது விற்றதாக பிச்சைமுத்து, 66; தங்கம்மாள், 59; ரவி, 23; சிவக்குமார், 28; முத்துசாமி, 52; சின்னபொண்ணு, 35; தனம், 53; பிரியா, 40; கலைச்செல்வன், 29; மற்றொரு தனம், 55; மற்றொரு சின்னபொன்ணு, 48; ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குளிக்க சென்றவரின்
ஸ்கூட்டர் திருட்டு
குளித்தலை,-குளித்தலை அருகே, கல்லடை பஞ்., இடையப்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி, 35. இவர் நேற்று முன்தினம் மதியம், ஒரு மணி அளவில் குளித்தலை, கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் பிள்ளையார் கோவில் அருகே தன், 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, ஆற்றுக்குள் சென்று குளித்துவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, குளித்தலை போலீசில் மூர்த்தி கொடுத்த புகாரின் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
சூதாட்டம்: ஐவருக்கு காப்பு
கரூர்,-கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், கோடங்கிப்பட்டி பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சத்தியராஜ், 34; முருகேசன், 33; தாமோதரன், 34; சதீஷ்குமார், 25; கலைசெல்வம், 26; ஆகிய ஐந்து பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 3,050 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ப.செ., அணியின் மா.செ., நியமனம்
கரூர்,- முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியின், கரூர் வடக்கு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், அணியின். கரூர் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த இளங்கோ, மாவட்ட ஜெ., பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து, கரூர் மாநகர செயலாளராக இருந்த ஆயில் ரமேஷ், என்பவரை கரூர் வடக்கு மாவட்ட செயலாளராக நியமித்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நியமித்துள்ளார். இதையடுத்து, புதிய மாவட்ட செயலாளர் ஆயில் ரமேசுக்கு, கரூர், ஆண்டாங்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
குட்கா விற்ற 5 பேர் சிக்கினர்
கரூர்,-கரூர் மாவட்டத்தில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றதாக, 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் டவுன், பசுபதிபாளையம், தான்தோன்றிமலை பகுதிகளில், நேற்று முன்தினம் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் அப்துல்லா, ஆர்த்தி, பத்மசீலன் ஆகியோர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக ரவிச்சந்திரன், 38; சுப்பிரமணி, 44; ரமேஷ், 49; ஆகிய மூன்று பேரை, கைது செய்தனர்.
இதேபோல், குளித்தலை அருகே, வீரியம்பாளையம் பஞ்., வெள்ளாளப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன், 44, எம். புதுப்பட்டியை சேர்ந்த ரமணன், 49, ஆகிய இருவரும், அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்றதாக, போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.