தேனி, : விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.4.5 லட்சம் வழங்காமல் காலம் தாழ்த்தியதால் தேனியில் இயங்கிய அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
மேகமலை ஹைவேவிஸ் மின்வாரிய அலுவலக மருந்தாளுனர் ஆறுமுகம் 51. 2016 பிப்., 20ல் டூவீலரில் (ஹெல்மெட் அணிந்து) பின்னால் மனைவி ஜெயந்தி 42, மகன் ஜானுடன் 18, லோயர் கேம்பில் இருந்து தேனி சென்று, மீண்டும் வீட்டிற்கு திரும்பினர்.
போடேந்திரபுரம் விலக்கு அருகில் சென்றபோது கம்பம் சென்ற அரசு பஸ், டூவீலரில் மோதியது. இதில் ஆறுமும், ஜெயந்திக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் ஆறுமுகம் 'கோமா' நிலைக்குச் சென்றார்.
இதனால் அவர் பணிக்கு தகுதியற்றவர் என்ற சான்றிதழை பெற்ற மின்வாரியம் அவரது மனைவி ஜெயந்திக்கு அலுவலக உதவியாளர் பணி வழங்கியது. பழனிச்செட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. 2 மாதங்களுக்கு முன் நீதிபதி கோபிநாதன், விபத்து இழப்பீடாக ஆறுமுகம் குடும்பத்திற்கு ரூ.35 லட்சம், ஜெயந்திக்கு ரூ.4.5 லட்சம் வழங்க உத்தரவிட்டார். அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தியது. வழக்கறிஞர் சுரேஷ்குமார் சார்பில் ஜெயந்தி மீண்டும் நிறைவேற்றுதல் மனுதாக்கல் செய்தார். இதில் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
மார்ச் 7ல் தேனி புது பஸ் ஸ்டாண்டில் தேனி - மதுரை சென்ற அரசு பஸ் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.
போக்குவரத்து கழகம் ரூ.35 லட்சம் இழப்பீடு செலுத்தி பஸ்சை மீட்டனர். இந்நிலையில் ஜெயந்திக்கு இழப்பீட்டுப் பணம் ரூ.4.5 லடசம் வழங்காததால் நேற்று நீதிமன்ற அலுவலர்கள் முன்னிலையில் தேனி டூ மதுரை பஸ் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு ஓட்டி செல்லப்பட்டது.