சிவகங்கை: மாவட்டத்தில் ரோந்து பணிகளை அதிகரிக்க அரசு வழங்கிய 'சைரன்' வசதியுடன் கூடிய 10 டூவீலர்களை சிவகங்கை எஸ்.பி., செல்வராஜ் ஸ்டேஷன்களுக்கு வழங்கினார்.
சிவகங்கை மாவட்டத்தில் சிலர் ஆயுதங்களை காண்பித்து அலைபேசி, பணம், நகை வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கைது செய்து, நகைகளை மீட்டு வருகின்றனர்.
இருப்பினும் வழிப்பறி குறைந்தபாடில்லை. ஏற்கனவே ஸ்டேஷன் தோறும் 'செக்டார்' போலீசார் நியமித்து அவர்கள் வாகனங்களில் ரோந்து சென்று வருகின்றனர். மேலும் ரோந்து பணிகளை இன்னும் பலப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு சிவகங்கைக்கு 'சைரன்' வசதியுடன் 10 ரோந்து டூவீலர்களை வழங்கியுள்ளது.
அவற்றை சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, திருப்புத்துார் நகர் போலீஸ் ஸ்டேஷன்களில் பயன்படுத்தும் நோக்கில், அந்த டூவீலர்களை சிவகங்கை எஸ்.பி., செல்வராஜ் ஒப்படைத்தார்.
ஆயதப்படை இன்ஸ்பெக்டர் நந்தகோபால், எஸ்.பி., தனிப்பிரிவு எஸ்.ஐ.,க்கள் சரவணபோஸ், பழனியப்பன் பங்கேற்றனர்.