ஈரோடு,-''கோடை காலம் துவங்கியதால், மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரான, அரசின் ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை ஆணையர் பிரகாஷ் பேசியதாவது:
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நடக்கும் பணிகளை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். சமத்துவபுர குடியிருப்புகளில் தேவையான மேம்பாட்டு பணி செய்ய வேண்டும்.
கோடை காலம் துவங்கிவிட்டதால், அனைத்து பகுதிகளிலும் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துாய்மை பாரத இயக்கம், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை துரிதப்படுத்தி, சீரமைக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.