மானாமதுரை, : மானாமதுரை அரசு மருத்துவமனையில் இரவில் பணி செய்யும் பெண் டாக்டர்கள், மற்றும் செவிலியர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இங்கு போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் 600க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.50க்கும் மேற்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இரவு நேரங்களில் விபத்து மற்றும் அடிதடி வழக்குகளில் காயமடைபவர்கள், அவர்களோடு வரும் உறவினர்கள் சிலர் பணியில் இருக்கும் பெண் டாக்டர்களிடமும்,செவிலியர்களிடமும் தகராறு செய்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினால் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களிடம் ஏன் இங்கு சிகிச்சை அளிக்க முடியாதா என்று வாக்குவாதம் செய்கின்றனர்.
மானாமதுரை போலீசில் புகார் தெரிவித்தால் உடனடியாக போலீசார் வர தாமதமாகிறது. ஆகவே மானாமதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உடனடியாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.