பரமக்குடி : பரமக்குடி சர்வீஸ் ரோடு, தரைப்பாலம் பகுதியில் தினம்தினம் விபத்துக்கள்நடக்கும் நிலையில், போலீஸ் உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள் கண்காணிப்பின்றி உயிர் பலிகள் நடக்கும் அவலம் உள்ளது.
பரமக்குடி நகராட்சி தெருக்களில் நெரிசலை தவிர்க்கும் விதமாக வைகை ஆற்றின் இரண்டு கரைகளிலும் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடு காட்டு பரமக்குடியில் துவங்கி காக்கா தோப்பு எல்லை வரை 2 கி.மீ., உள்ளது.
இந்நிலையில், ரோடு அமைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளையும் கடந்த நிலையில் மின்விளக்கு வசதி இன்றி உள்ளது. முக்கியமாக ரோட்டில் ஒவ்வொரு தெருமுனை சந்திப்பிலும் மற்றும் ஆங்காங்கே மிகப்பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன.
மேலும் ரோடு அமைத்த போது மின் கம்பங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில் அப்பகுதிகளில் ரோடு பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. இதனால் இவ்வழியாக செல்லும் பல ஆயிரம் மாணவர்கள், பொதுமக்களின் டூவீலர், ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள்தடுமாறி செல்கின்றன.
இந்நிலையில், தரைப்பாலம் பகுதியில் நான்கு முனைகள் சந்திக்கும் இடத்தில் தாழ்வான பகுதியில் எந்த பாதுகாப்பும் இன்றி வாகனங்கள் எதிர் எதிர் திசையில் செல்கின்றன. இதனால் ஒட்டு மொத்தமாக சர்வீஸ் ரோடு அமைத்த நாள் முதல் 100க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன.
இதே போல் ரோட்டில்உள்ள பள்ளம் மேடுகளால் தடுமாறி நடந்து செல்வோர், டூவீலர் மற்றும் ஆட்டோக்கள் புரண்டு உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதிகளில் போலீசார் கண்காணிப்பதுடன், அனைத்து துறை அதிகாரிகளும் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement