மானாமதுரை, : மானாமதுரையில் இருந்து சிவகங்கை ,காளையார் கோவிலுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்கள், புறநகர் பஸ்களாக மாற்றி இயக்கப்படுவதால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மானாமதுரையில் இருந்து சிவகங்கை, காளையார் கோயில், திருப்புவனம் பரமக்குடி நரிக்குடி, இளையான்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக மானாமதுரையில் இருந்து தினந்தோறும் காலை 8:30 மணி மற்றும் மாலை 5:30 மணிக்கு காளையார் கோயிலுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்சை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக சிவகங்கைக்கு புறநகர் பஸ்ஸாக இயக்கப்பட்டு வருவதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள் மற்றும் மகளிர் கூறுகையில், மானாமதுரையிலிருந்து காளையார்கோயில் செல்லும் டவுன் பஸ்சில் மாணவர்கள் மற்றும் மகளிருக்கு இலவசம் என்பதால் போதுமான வருவாய் கிடைக்காததையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்த டவுன் பஸ்சிற்கு பதிலாக புறநகர் பஸ்ஸாக சிவகங்கைக்கு இயக்கி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் எப்போதும் போல் காலை மற்றும் மாலை நேரங்களில் காளையார் கோயிலுக்கு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.