வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-'ஜி - 20' நிதி கட்டமைப்பு தொடர்பான இரண்டாவது பணிக்குழு கூட்டம், சென்னையில் நேற்று துவங்கியது.
![]()
|
உலக பொருளாதாரத்தின் முதன்மை சிக்கல்களைத் தீர்க்க, வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக, 'ஜி - 20' கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
80 பேர்
இந்த அமைப்பில், அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, கனடா, இந்தியா, அமெரிக்கா உட்பட, 20 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அமைப்பின், 2023ம் ஆண்டு உச்சி மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து, கல்வித் துறை சார்ந்த முதல் பணிக்குழு கூட்டம், சென்னையில் இந்தாண்டு ஜனவரியில் நடந்தது.
தற்போது, இரண்டாவது நிதி கட்டமைப்பு பணிக்குழுவின் இரண்டு நாள் கூட்டம், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில், நேற்று காலை, 9:00 மணிக்கு துவங்கியது.
அதில், பொது மற்றும் மத்திய வங்கி கொள்கைகள், பண வீக்கம் உட்பட, தற்போதைய மற்றும் எதிர்காலத்தின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. 'ஜி - 20' நாடுகள் மற்றும் நட்புறவு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், 80 பேர் பங்கேற்றனர்.
நேற்றைய கூட்டத்தில், காலநிலை மாற்றம், உணவு உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவது, விலைவாசி உயர்வு, பணவீக்கத்தின் தாக்கம், கால நிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து, விரிவான ஆலோசனை நடத்தப்படுகிறது.
பல்வேறு சவால்கள்
ஐ.நா., வர்த்தக மேம்பாட்டு பிரிவின் பிரதிநிதி அலெஜான்ட்ரோ பெடெரிகோ சுரியேட்டா கனோவா (Alejandro federico izurieta canova) அளித்த பேட்டி:
இந்தியாவிற்கு நான் பலமுறை வந்துள்ளேன். இந்திய மக்களின் விருந்தோம்பல், எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
கூட்டத்தில், அனைத்து நாடுகளும், தங்கள் நாட்டின் பொருளாதார நிலை குறித்து, தனித்தனியாக பேசினர். உலக பொருளாதார நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பண வீக்கத்தால் ஏற்படும் வினியோக சங்கிலியின் தாக்கம், அதனால் உருவாகும் வேலை இல்லா நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
![]()
|
எதிர்காலத்தில் ஏற்படும் பொருளாதார தேக்க நிலையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உட்பட, பல்வேறு சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.நா., வர்த்தக மேம்பாட்டு பிரிவின் மற்றொரு பிரதிநிதியான ஆண்ட்ரெஸ் மிகுவல் ரோண்டன் கூறுகையில், ''கருத்தரங்கின் முதல் சுற்று விவாதம் சிறப்பாக இருந்தது,'' என்றார்.
சென்னையில், இந்த நிதி கட்டமைப்பு பணிக்குழுவின் கூட்டம், இன்று நிறைவடைகிறது. இந்த குழுவின் முதல் கூட்டம், பெங்களூரில், 2022 டிசம்பரில் நடந்தது.