கரூர்: கரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கீழ் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதியில் உள்ள காலியிடங்களுக்கு 2010-11ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மூன்று நாட்கள் நடக்கிறது. விடுதியில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் சேர்க்கை நாளன்று ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பள்ளி சேர்க்கை சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் சேர்க்கை நடக்கும் இடத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு முன்பாகவே வர வேண்டும். ஆறாம் தேதி காலை 10 மணிக்கு லாலாப்பேட்டை பிற்படுத்தப்பட்ட நலத்துறை மாணவர் விடுதி, பஞ்சப்பட்டி பிற்படுத்தப்பட்ட நலத்துறை மாணவர் விடுதி, தோகமலை மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை பள்ளி மாணவி விடுதி, குளித்தலை பிற்படுத்தப்பட்ட நலத்துறை மாணவி விடுதி ஆகிய விடுதிகளுக்கான சேர்க்கை குளித்தலை தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.
அதே நாள் மாலை 3 மணிக்கு தரகம்பட்டி மாணவர் விடுதி, காணியாளம்பட்டி மாணவர் விடுதி என மிகவும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை விடுதிக்கு கடவூர் தாலுகா அலுவலகத்தில் சேர்க்கை நடக்கிறது. ஏழாம் தேதி காலை 10.30 மணிக்கு சின்னதாராபுரம் பள்ளி மாணவி விடுதி, அரவக்குறிச்சி மாணவர் விடுதி என பிற்படுத்தப்பட்ட நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிக்கு அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்திலும், எட்டாம் தேதி கரூர், வாங்கல் மற்றும் நொய்யல் ஆகிய மூன்று பள்ளி மாணவர் விடுதி என பிற்படுத்தப்பட்ட நலத்துறை விடுதியில் சேர கரூர் தாலுகா அலுவலகத்திலும் சேர்க்கை நடக்கிறது.