மதுரை : தமிழகத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் போக்குவரத்து கழக நிர்வாகம் ரூ.615.73 கோடி இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது என அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதிர்ச்சியை வெளிப்படுத்திய நீதிபதி, தொகையை வழங்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
மதுரை எல்.கே.டி.நகர் அருகே டூவீலரில் சென்ற திருநாவுக்கரசு மீது 2021 ல் அரசு பஸ் மோதியது. அவர் இறந்தார். இழப்பீடு வழங்க போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி அவரது மனைவி மதுரை மோட்டார் வாகன விபத்து வழக்கு தீர்ப்பாயத்தில் மனு செய்தார். ரூ.13 லட்சத்து 59 ஆயிரம் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார்.
ஏற்கனவே விசாரணையின்போது நீதிபதி என்.சதீஷ்குமார்: தமிழகம் முழுவதும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் எவ்வளவு தொகையை போக்குவரத்து கழக நிர்வாகம் வழங்க வேண்டியுள்ளது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். நேற்று நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார்.
தமிழக அரசு தரப்பு: பல்வேறு வழக்குகளில் ரூ.615.73 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.74.75 கோடி இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது என அறிக்கை தாக்கல் செய்தது.
நீதிபதி: மிகப்பெரிய தொகையாக உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. பயணிகள் டிக்கெட் கட்டணத்திலிருந்து குறிப்பிட்ட தொகை இழப்பீட்டிற்காக ஒதுக்கப்படுவதாக அரசு தரப்பு கூறுகிறது. இதற்காக டிக்கெட் கட்டணத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தொகை, இழப்பீடு பட்டுவாடா செய்யப்பட்ட தொகை விபரங்களை அரசு தரப்பில் ஏப்.,20 ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.