அவனியாபுரம் : ''தி.மு.க., அமைச்சர்களுக்கும், ஆன் லைன் ரம்மி கம்பெனிகளுக்கும் உறவு இருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தேகம் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் நேற்று அவர் கூறியதாவது: ராகுலுக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட பின்னணியில் 2019ல் கர்நாடகாவில் 'அது எப்படி இந்தியாவில் உள்ள எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்று உள்ளது' என கூறியுள்ளார்.
மோடி என்ற புனைப்பெயர் உள்ளவர்கள் கொந்தளித்து பல இடங்களில் வழக்கு தொடர்ந்தனர். அதில் ஒரு வழக்கிற்கு தீர்ப்பு வந்துள்ளது. இது ராகுலுக்கு முதல் முறை அல்ல. இரண்டாம் முறை. ஏற்கனவே ஒரு வழக்கில் அவருக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.
ஒரு பொறுப்புள்ள அரசியல் பதவியில் இருக்கக்கூடியவர்கள் பயன்படுத்தக்கூடிய வார்த்தை சரியாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க., 'டெக்னிக்'கை காங்கிரசாரும் கற்றுக்கொண்டு விட்டனர்.
அதாவது ரயில் வராத தண்டவாளத்திற்கு செல்வது. அங்கு மூன்று பேர் நின்று ஒரு ஸ்டேஷனில் இருந்து மற்றொரு ஸ்டேஷனுக்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். காங்கிரசின் கைச்சின்னத்திற்கு கூட ஐந்து விரல்கள் உள்ளன. ஆனால் காங்., தலைவருக்கு போராட்டத்தில் 3 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
கூட்டணிக்குள் உரசல் வருவது சகஜம்
பா.ஜ., வை பொறுத்தவரை தமிழகத்தில் கட்சியை எப்படி வலுப்படுத்துவது, மக்களின் அன்பை எப்படி பெறுவது, ஆளுகின்ற கட்சியாக எப்படி கொண்டு வருவது என்பதில் யாருக்கும் குழப்பம் இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பார்லிமென்ட் குழு தான் முடிவெடுக்கும்.
புதிதாக எதுவும் இல்லை, கூட்டணியை பொறுத்தவரை கூச்சலோ, குழப்பமோ இல்லை. பா.ஜ.,வுக்கும், எனக்கும் எந்த ஒரு கட்சியின் மீதும் தலைவர் மீதும் எந்தவித கோபம், ஆதங்கம் இல்லை. அ.தி.மு.க., 1972 முதல் உள்ளது. அவர்கள் பெரிய கட்சி. வளர வேண்டும் என்று நினைப்பதில் எந்த தவறும் இல்லை.
பா.ஜ.,வும் வளர வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். கூட்டணிக்குள் சின்ன சின்ன சிராய்ப்புகள், உரசல்கள் வருவது சகஜம் தான்.
கனவு உலகத்தில் அமைச்சர்
அண்டை மாநிலங்களில் பால் கொள்முதல் விலை ரூ.48. தமிழகத்தில் ரூ. 33 ஆக உள்ளது. பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அமைச்சர் நாசர் கனவு உலகத்தில் உள்ளார். பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு நாங்கள் நம்பிக்கை கொடுத்துள்ளோம்.
கோட்டையை நோக்கி இதை பெரிய அளவில் முன்னெடுப்போம். ஒரு புறம் பால் விலையை அதிகம் உயர்த்திவிட்டு கொள்முதல் விலையை பெயருக்கு கூட்டுகிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 'மேக்கப்' போட்டு இந்த அரசு தங்கள் வாழ்க்கையை நடத்துகிறது.
கர்நாடகாவில் பா.ஜ., மெஜாரிட்டி ஆட்சி அமைக்கும். 140 'சீட்'டுக்கு மேல் வெற்றி பெறுவோம். ஆன் லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும். தடை சட்டம் கொண்டு வர வேண்டும். இப்பிரச்னையில் கவர்னர் பல கேள்விகளை கேட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பில் எங்கெல்லாம் பிரச்னை உள்ளது. அப்படியே நிறைவேற்றினால் என்ன பிரச்னை வரும். அவற்றை எல்லாம் சரி செய்து கொடுங்கள் என கேள்வி எழுப்பி இருந்தார்.
ஆனால் தமிழக அரசு, 'தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்பது போல மறுபடியும் எந்தவித மாற்றமும் செய்யாமல் மீண்டும் அனுப்புகிறது. இம்முறை கவர்னர் கையெழுத்திட்டே ஆக வேண்டும். ஆனால் சில நாட்களில் தனியார் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் தடை வாங்கிவிடுவர்.
அப்போது தமிழக அரசு வருத்தப்படும். பலமுறை சொல்லியும், கேட்ட மூன்று காரணங்களை மாற்றி அனுப்புங்கள் என்று கூறியும், எந்தவித மாற்றமும் செய்யாமல் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருப்பதால் தி.மு.க., அமைச்சர்களுக்கும் ஆன்லைன் ரம்மி கம்பெனிக்கும் உறவு இருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது.
ஏப்., 14 தி.மு.க., அரசின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். கமல் நன்றாக பேசினாலே புரியாது. இதில் ராகுலுடன் பேசுகிறார். எதுவும் புரியவில்லை. காங்கிரஸ் உடன் தான் மக்கள் நீதி மையம் இருக்கும் என்பதை ஒவ்வொரு நிகழ்விலும் கமல் ஊர்ஜிதப்படுத்தி வருகிறார்.
இவ்வாறு கூறினார்.
துாத்துக்குடி: ராகுலின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது குறித்து துாத்துக்குடியில் அண்ணாமலை கூறுகையில், சூரத் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. சட்டம் அனைவருக்கும் சமம். 30 நாட்களுக்குள் அவர் மேல் முறையீடு செய்ய கோர்ட் வாய்ப்பு அளித்துள்ளது. தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். ராகுல் போட்டியிடக் கூடாது என இது போன்று நடவடிக்கை எடுக்கவில்லை. பா.ஜ.,வின் தேர்தல் பிராண்ட் அம்பாசிடரே ராகுல் தான் என்பது என் எண்ணம். எனவே ராகுல் தொடர்ந்து பேச வேண்டும். அவர் புதிய பேச்சுகளுடன் வர வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.