சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சிறுவாச்சூர், வடக்குகாட்டைச் சேர்ந்தவர் பிரபாகரன், 30; பெரம்பலுார் ஆயுதப்படை பிரிவு போலீஸ்காரர். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தலைவாசலைச் சேர்ந்த, 17 வயது பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. பலாத்காரம் செய்ததில், சிறுமி எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். மாணவியின் பெற்றோர் புகார்படி, ஆத்துார் மகளிர் போலீசார் பிரபாகரன் மீது, 'போக்சோ' வழக்குப்பதிந்தனர்.
இது தொடர்பாக நேற்று மாலை, ஆத்துார் ஸ்டேஷனை சேர்ந்த இரு ஆண் போலீசார், ஆத்துார் மகளிர் ஸ்டேஷனுக்கு, பிரபாகரனை அழைத்து வந்தனர். ஸ்டேஷன் வளாகத்தில் நுழைந்த நிலையில், இரு போலீசாரையும் தள்ளிவிட்டு பிரபாகரன் ஓடினார். காமராஜர் சாலையில் ஒருவர் பைக்கில் தயாராக இருந்தார். அதில் ஏறி பிரபாகரன் தப்பி விட்டார். அவரை பிடிக்க ஆத்துார் டி.எஸ்.பி., நாகராஜ் தலைமையில், மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
52 பவுன் நகை, ரூ.4.40 லட்சம் கொள்ளை
தூத்துக்குடிமாவட்டம் திருச்செந்தூர் முத்துநகரில் வசிப்பவர் சுந்தர மாரியப்பன் 35. உடன்குடி அனல் மின் நிலையத்தில் சிவில் இன்ஜினியர். நேற்று முன்தினம் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூத்துக்குடி சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 52 பவுன் தங்க நகைகள், 4.40 லட்சம் ரூபாய் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
காரை மறித்து கொள்ளை; சகோதரர்கள் கைது
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே காரை வழிமறித்து கொள்ளையடித்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

பார்வதிபுரம் கிறிஸ்டோபர் காலனியைச் சேர்ந்தவர் சந்தோஷ்கோஷி 57. தனியார் நிறுவன மேலாளர். மார்ச் 10 ல் வேலை தொடர்பாக தாழக்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது வடசேரியைச் சேர்ந்த முகமது ஆசிப் என்பவர் காரில் லிப்ட் கேட்டு ஏறினார். இறச்சக்குளம் பகுதியில் ஆசிப் இறங்குவதற்கு காரை நிறுத்திய போது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று பேர் காரில் ஏறி சந்தோஷ்கோஷியை தாக்கி இரண்டே கால் பவுன் செயின் மற்றும் 73 ஆயிரம் ரூபாயை பறித்து விட்டு சென்று விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வடசேரி பகுதியை சேர்ந்த நசீர் 26, அவரது தம்பி சமீர் 24, ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். முகமது ஆசிப் உட்பட மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
வாலிபரை ஏமாற்றிய பெண் கைது
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுார் பகுதியைச் சேர்ந்த 36 வயது வாலிபருக்கு, திருப்பூரைச் சேர்ந்த தீபிகா, 30, என்பவர் சென்னையில் அறிமுகமானார். சில நாளுக்கு முன் வாலிபரிடம் பேசிய தீபிகா, அவரை வெளிநாட்டு பணிக்கு அனுப்பி வைப்பதாக கூறி, தன் வங்கி கணக்கில், 1.70 லட்சம் ரூபாயை பெற்றார். அதன் பின், எவ்வித தகவலும் இல்லாததால், தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் வாலிபர் புகார் அளித்தார். கோவை, ஹோட்டலில் பதுங்கி இருந்த அந்த பெண்ணை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பாதிரியார் சிறை மாற்றம்
பெண்களுடனான ஆபாச படங்கள் வெளியான நிலையில், பெங்களூரில் படிக்கும் குமரி மாவட்ட நர்சிங் மாணவி அளித்த புகாரில் பாதிரியார் பெனடிக் ஆன்றோ, 29, கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர், திருநெல்வேலி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக, நெல்லை சிறைக்கு அவர் மாற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்ஜி., வீட்டில் கொள்ளை
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் முத்துநகரில் வசிப்பவர் சுந்தர மாரியப்பன், 35; உடன்குடி அனல் மின் நிலைய சிவில் இன்ஜினியர். நேற்று முன்தினம் மனைவி மற்றும் குழந்தைகளுடன் துாத்துக்குடி சென்றார். நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 52 சவரன் நகைகள், 4.40 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரிந்தது.
லஞ்ச வி.ஏ.ஓ., கைது
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பண்ணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு, 41; விவசாயி. இவரிடம் பட்டா மாற்றம் செய்ய, சி.என்.பாளையத்தைச் சேர்ந்த வி.ஏ.ஓ., புகழேந்தி, 36, என்பவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். சுரேஷ்பாபு, கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் அறிவுரைப்படி, 5,000 ரூபாயை வி.ஏ.ஓ., புகழேந்தியிடம் நேற்று காலை சுரேஷ்பாபு கொடுத்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வி.ஏ.ஓ., புகழேந்தியை கைது செய்தனர்.
'ஆசிட்' வீச்சு பெண் 'சீரியஸ்'
கோவை மாவட்டம், சூலுார் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 45; லாரி டிரைவர். இவரது மனைவி கவிதா, 35. இவர், கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்தார். நேற்று முன்தினம், திருட்டு வழக்கில் விசாரணைக்காக கோவை நீதிமன்றத்துக்கு கவிதா வந்தார். அங்கு அவர் மீது 'ஆசிட்'டை கணவர் ஊற்றினார். படுகாயம் அடைந்த கவிதா, கோவை அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பஸ்சில் செயின் திருட்டு: பெண்கள் மூவர் கைது
நாகர்கோவில் அருகே அனந்தநாடார்குடியை சேர்ந்தவர் சுனிதா 39. இவர் அம்மாண்டிவிளைக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்த போது இவரது கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் தங்க செயின் மாயமாகியிருந்தது. அவர் கொடுத்த புகாரில் ராஜாக்கமங்கலம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய மூன்று பெண்கள் பற்றி சந்தேகம் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து அந்த பகுதியில் வாகன சோதனை நடத்திய போலீசார் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த துாத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த பிரியா (எ) தேவயானை 29, நதியா (எ) மாரீஸ்வரி 24, பிரியா (எ) ஈஸ்வரி 25, ஆகிய மூவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனர்.
'உயர்ந்த ஆடைகள் அணிந்து பஸ்களிலும், பஸ் ஸ்டாண்டுகளில் நின்று செயின், பர்ஸ் திருடும் அவர்கள் சுனிதாவிடம் செயின் திருடியது விசாரணையில் தெரிய வந்தது. மூவரும் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
புரோகிதரிடம் ரூ.1 லட்சம் 'ஸ்வாஹா'
ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் பாபுலால் சர்மா, 55, புரோகிதர். இவர், ஆன்லைனில் அடிக்கடி பொருட்கள் வாங்குவது வழக்கம். இந்நிலையில், கண் பிரச்னை சிகிச்சைக்காக, 10ம் தேதி மாத்திரைகளை, 'ஆன்லைன் ஆர்டர்' செய்தார். மாத்திரைகள் 17ல் கிடைக்கப் பெற்றது; அதற்காக, 999 ரூபாய்க்கான இலவச 'கூப்பன்' இருந்தது.
கூப்பன் பரிசை பெறுவதற்காக, அதில் இருந்த 'மொபைல் போன்' எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் கேட்டுள்ளார். அதில் பேசியவர் கூறியது இவருக்கு புரியவில்லை. இதனால், 'கூகுளில்' ஆன்லைன் நிறுவன 'கஸ்டமர் கேரில்' அந்த மொபைல் போன் எண் 79756- 73539ஐ கண்டு பிடித்து பேசினார். அப்போது அந்த எண்ணில் இருந்து, 'லிங்க்' ஒன்றை அனுப்பி, அதை பதிவிறக்கம் செய்ய கூறினர்.
அதுபோல பதிவிறக்கம் செய்த பாபுலால் சர்மா, தன் மனைவி வங்கி இணைப்பில் உள்ள, 'கூகுள் பே' யு.பி.ஐ., எண்ணை பதிவு செய்தார். இதையடுத்து, 'பரிசு பணம் 24 மணி நேரத்தில் வந்துவிடும்' என கூறினர். அதை உண்மை என நம்பி, அவர்கள் கூறியபடி செய்த நிலையில், மார்ச் 21ல் புரோகிதரின் மனைவி வங்கி கணக்கில் இருந்து, 99 ஆயிரத்து 996 ரூபாய் எடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மோசடி செய்தவர்களிடம் பணத்தை மீட்டுத்தருமாறு பாபுலால் சர்மா ராமநாதபுரம் 'சைபர் கிரைம்' போலீசில் புகார்அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
பச்சிளங் குழந்தை விற்பனை; தாய் உட்பட 11 பேர் கைது
ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா தேவிக்கு, இங்குள்ள அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. அடுத்த சில மணி நேரத்திலேயே இந்த பச்சிளங் குழந்தை விற்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. உடனடியாக விசாரணை நடத்திய போலீசார், 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்டதுடன், இதில் தொடர்புடைய 11 பேரை கைது செய்தனர்.
பயங்கர ஆயுதங்களுடன் 16 நக்சல்கள் சரண்
சத்தீஸ்கரில், நக்சல்களுக்கான மறுவாழ்வு திட்டத்தை முன்னிறுத்தி மாநில அரசு பேச்சு நடத்தியதை அடுத்து, பல்வேறு நக்சல் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 16 பேர் நேற்று சுக்மா மாவட்ட போலீசாரிடம் சரணடைந்தனர். இவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் ஒப்படைத்தனர். இவர்களில், ஜோகி, பதம் சோமா, பதம் தேவா, நீலா ஆகியோரை பிடித்து தருபவர்களுக்கு கூட்டாக 15 லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்ட நிலையில், இவர்கள் தாமாகவே முன்வந்து சரணடைந்துள்ளனர்.