பெரியகுளம் ; பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பேரூராட்சி 3 வது வார்டு பங்களாப்பட்டியில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வதால் ஒரு குடம் குடிநீர் ரூ.10க்கு விலைக்கு வாங்கும் அவல நிலை தொடர்கிறது.
பங்களாபட்டி வடக்கு தெரு, பெரியார் காலனியில் 400 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு குடிநீர், வடிகால், ரோடு, தெருவிளக்கு வசதிகள் இன்றி பேரூராட்சியால் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.
வராக நதியில் வெள்ளம் வந்தால் சாக்கடை கழிவுகள் வீட்டுக்குள் வரும் அவல நிலை உள்ளது.
பொதுப்பணித்துறை, தாமரைக்குளம் பேரூராட்சியும் இணைந்து கரையோரம் தடுப்புச்சுவர் கட்டும் பணிக்காக சர்வே செய்து பல மாதங்கள் ஆகியும் பணி நடக்கவில்லை.
இதனால் ஆற்றில் எப்போது வெள்ளம் வந்தாலும் வீட்டுக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் வசிக்கின்றனர். வார்டு பொதுமக்கள் கருத்து:
ஆட்டோவில் வரும் குடிநீர்
பழனியம்மாள்,பங்களாபட்டி: இங்கு 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒரே பொதுக்குழாய் வழியாக வினியோகிக்கப்படுகிறது. செயற்கையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கோடை துவங்குவதற்கு முன்பே இப் பகுதியில் செயற்கையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. பங்களாபட்டிக்கு தனியாக 'ஜல் ஜீவன்' திட்டத்தில் ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்ட வேண்டும். இங்குள்ள 3 போர்வெல்லில் 2 பழுதாகியுள்ளது.
இதனால் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து பெரியகுளம் பகுதியில் இருந்து குடங்களில் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. கூலி வேலைக்கு செல்லும் மக்கள் ஒரு குடம் ரூ.10க்கு வாங்கும் சிரமமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
சுத்தம் இல்லாத சாக்கடை
பாண்டீஸ்வரி, பங்களாபட்டி: இங்கு மாதக்கணக்கில் சாக்கடை சுத்தம் செய்யாததால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. பல இடங்களில் சாக்கடை சேதமாகி உள்ளதால் மழைக்காலங்களில் சாக்கடை கழிவு வீட்டுக்குள் வருகிறது. அதிகளவு கொசு உற்பத்தியாகி பெரும் தொந்தரவாக உள்ளது. கொசுக்கடியில் தூங்கமுடியவில்லை. கொசு மருந்து தெளிப்பதில்லை. தெருவிளக்கு எரியாததால் இரவில் விஷ பூச்சிகள் வீட்டுக்குள் நுழைகிறது. சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பிரச்னையை தெரிவித்தும் ஒன்று நடக்கவில்லை.
ரோடு வ சதி இல் லை
அலெக்ஸ் பாண்டியன், பங்களாபட்டி: பல ஆண்டுகளாக ரோடு அமைக்காததால் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.நடந்து செல்லும் போது கவனமாக செல்லாவிட்டால் கல் இடறி காயம் ஏற்படும். ரோடு மிக மோசமாக இருப்பதை அறிந்து அவசரத்திற்கு கூட ஆம்புலன்ஸ் வருவதில்லை. இங்குள்ள சமுதாயக் கூடத்தில் சுற்று சுவர்கள், மேற்கூரை இடித்தும், கான்கிரீட் உடைந்து 'கம்பி' தெரிகிறது.
சமுதாய கூடத்தில் குடிநீர் வசதி செய்து தர வில்லை. கடந்த வாரம் சமுதாயக்கூடத்தை பராமரிப்பு செய்வதற்காக பேரூராட்சி நிர்வாகத்தினர் சர்வே செய்து விட்டு சென்றனர். விரைவில் சீரமைக்க வேண்டும்.