வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வழிகாட்டி மதிப்பு உயர்வின் காரணமாக, அரசுத் திட்டங்களுக்கு நிலம் தருவோர்க்கு நல்ல இழப்பீடு கிடைக்குமென்பதால், இனி வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் கிடைப்பதில் தாமதம் ஏற்படாது என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், வழிகாட்டி மதிப்பு மட்டும், பல ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் உயர்த்தப்படுகிறது.
இதனால் வழிகாட்டி மதிப்புக்கும், சந்தை மதிப்புக்கும் இடையில், மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது.
பல ஆண்டுகளுக்குப் பின், கடந்த 2012 ல், ஜெ., முதல்வராக இருந்தபோது, வழிகாட்டி மதிப்பை உயர்த்த குழு அமைக்கப்பட்டு, அந்தக்குழுவின் அறிக்கைப்படி, மாநிலம் முழுவதும் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது.

ஐந்தாண்டுக்கு ஒரு முறையாவது இதை உயர்த்த வேண்டியது கட்டாயமென்ற நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு, கடந்த 2012 ல் உயர்த்தப்பட்ட வழிகாட்டி மதிப்பை, 33 சதவீதம் குறைத்து 2017 ஜூன் 9ல் அரசாணை வெளியிட்டது. வருவாய் இழப்பை ஈடுகட்ட, பதிவுக்கட்டணத்தை ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தியது.
இதற்கேற்ப, விமான நிலைய விரிவாக்கம், பாலங்கள், புறவழிச்சாலை உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்கு, நிலம் கொடுக்கும் பலருக்கும் வழிகாட்டி மதிப்பு குறைந்ததால், இழப்பீட்டுத் தொகையும் குறைந்தது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர்; கடும் எதிர்ப்பு எழுந்தும் அரசாணை திரும்பப்பெறப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டின் கடுமையான உத்தரவுக்குப் பின்பே, நியாயமான இழப்பீடு வழங்குவதற்கான சட்டம், 2013ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
ஆனால் வழிகாட்டி மதிப்பைக் குறைத்து, பதிவுக்கட்டணத்தை உயர்த்தியதால், மக்களுக்கு வரும் இழப்பீடு குறைந்து, பதிவுச்செலவு அதிகமானது.
இந்நிலையில்தான், அப்போது குறைக்கப்பட்ட 33 சதவீத வழிகாட்டி மதிப்பு, இப்போது மீண்டும் உயர்த்தப்பட்டு, பதிவுக்கட்டணம் இரண்டு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுத் திட்டங்களுக்கு நிலம் கொடுப்போருக்கு இழப்பீடு அதிகமாக கிடைக்கும்; கிரயச் செலவு குறையும் என்பதால், அரசுத் திட்டங்களுக்கு நிலம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்போர், நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
விரைவாக குழு அமைத்து, சந்தை மதிப்புக்கேற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்த வேண்டியது அவசியம். அதே நேரத்தில், பதிவுக்கட்டணத்தை முன்பிருந்ததுபோலவே, ஒரு சதவீதமாகக் குறைக்க வேண்டுமென்பதும் மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.