வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் புதிய துணை நகரம் அமைப்பதற்கான அடிப்படை ஆய்வு பணிகள், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.
சென்னையில் மக்கள் நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், நகரின் பிரதான பகுதிக்கு வெளியில், புதிய துணை நகரங்கள் ஏற்படுத்த வேண்டும் என, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் இரண்டாவது முழுமை திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.
கடந்த, 2008ல் இதற்கான பரிந்துரை அளிக்கப்பட்டாலும், சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கத்தில் இறுதி முடிவு எடுக்கப்படாததால், துணை நகர பணிகள் முடங்கின. தற்போது, துணை நகரங்கள் அமைப்பது தொடர்பான பணிகளை, சி.எம்.டி.ஏ., முடுக்கி விட்டுள்ளது.இதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருமழிசை, மீஞ்சூர் ஆகிய ஐந்து இடங்களில், புதிய துணை நகரங்கள் ஏற்படுத்த, அரசு ஒப்புதல் அளித்தது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
சட்டசபையில் கவர்னர் உரையில், 'மாமல்லபுரம் அருகில் புதிய துணை நகரம் ஏற்படுத்தப்படும்' என அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர் நடவடிக்கைகளை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முடுக்கி விட்டுள்ளது.

அங்கு புதிய துணை நகரம் அமைய உள்ள பகுதி, அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
துணை நகரம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை, ஜூலையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் அருகில், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி, இதற்கான பகுதிகள் தேர்வு செய்யப்படும் என தெரியவந்துள்ளது.
தனியார் பங்களிப்பு?
துணை நகரம் திட்டத்தில் தனியார் பங்களிப்புக்கு உரிய வாய்ப்பு கொடுத்தால், அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வீடு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், அரசு இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் துணை நகர திட்டம் வெற்றி அடையும்.
கட்டுமான துறையினர்
- நமது நிருபர் -