வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: கோவை மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார், டி.ஆர்.ஓ., லீலா மற்றும் வேளாண் அதிகாரிகள், விவசாயிகளிடம் மனுக்கள் பெற்றனர்.

குட்டைகள் மாயம்
அதன் பின், விவசாயிகள் பேசியதாவது:
விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருகின்றனர். பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பில் உள்ள தொழில்நுட்ப குழுவில் அலுவலர்கள் அல்லாமல் விவசாயிகள் இருக்க வேண்டும். உக்கடம் கழிவு நீர் பண்ணையில் இருந்து வெள்ளலுார் வரை இருந்த, 7 குட்டைகளில், 6 குட்டைகளை காணவில்லை; அவற்றை மீட்க வேண்டும்.
மதகுகளை சீரமையுங்க
தொண்டாமுத்துார் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வெளியேற்றப்படும் கழிவு நீர், விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் தேங்கியிருக்கிறது. கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நொய்யல் ஆறு வழித்தடத்தில் மதகுகள் சீரமைக்கவில்லை; துருப்பிடித்திருக்கின்றன. அவற்றை இப்போதே செப்பனிட வேண்டும். மழைக்காலத்தில் தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்படும்.
பால் கொள்முதல் விலையை அதிகரித்து தர வேண்டும். தீவனங்களுக்கு மானியம் வழங்குவதை ஆவின் நிறுத்தி விட்டது. மாடுகளுக்கு அடர் தீவனம் கிடைக்கச் செய்ய வேண்டும். பீக் ஹவர்ஸில் மின் வினியோகம் சரியாக இருப்பதில்லை; பீக் ஹவர்ஸ் அல்லாத சமயங்களில் முறையாக சப்ளை செய்ய வேண்டும்.
86வது வார்டு ஆசாத் நகர் பின்புறமுள்ள நொய்யல் ஆற்றங்கரையில் சிலர், மின் ஒயர்களை திருடி வந்து, தீயிட்டு கொளுத்தி, கம்பிகளை எடுத்துச் செல்கின்றனர். அதனால் எழும் புகையால், தென்னை, வாழை, காய்கறிகள் பாதிக்கின்றன. இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
நேற்று காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை, இரண்டு மணி நேரம் கூட்டம் நடந்தது; ஒவ்வொரு விவசாயியின் பேச்சையும் கலெக்டர் பொறுமையாக கேட்டு, முக்கியமான விஷயங்களை குறிப்பெடுத்தார். மனுக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார்.
வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர் செந்தில்குமார் பேசுகையில், ''மூன்றாம் கட்டமாக, வடவள்ளி, மருதமலை, கொங்கு திருப்பதி, ஈஷா வரை மெட்ரோ அமைத்தால், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.தொண்டாமுத்துாரை சேர்ந்த விவசாயி தங்கவேல் பேசுகையில், ''ஆர்வக்கோளாறால் அவர் பேசி விட்டார். அவரை கலெக்டர் தனியாக அழைத்து அறிவுரை கூற வேண்டும். கோவையில் தொண்டாமுத்துார் பகுதியில் மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது; அதையும் அழித்து விட வேண்டாம். அந்த பகுதிக்கே 'மெட்ரோ' வேண்டாங்க,'' என்றார்.

குறைகேட்பு கூட்டம் நடந்த அரங்கு சிறியதாக இருந்ததாலும், போதிய இருக்கைகள் இல்லாததாலும், விவசாயிகள் பலரும் நின்று கொண்டிருந்தனர். பெண் விவசாயி ஒருவர், இருக்கை போட வேண்டுமென, கலெக்டரிடம் முறையிட்டார்.கலெக்டர் கிராந்திகுமார், ''அலுவலகத்தில் வேறு அரங்கம் இல்லை. அலுவலக பின்புறத்தில் உள்ள பழைய கட்டடத்தை இடித்து விட்டு, 500 இருக்கைகள் போடும் வகையில் புதிதாக கூட்டரங்கு கட்ட முடிவு செய்யப்பட்டு, கருத்துரு அனுப்பப்பட்டிருக்கிறது,'' என்றார்.