டி.ஜி.பி., சைலேந்திரபாபு, 'வீடியோ' பதிவு:
மத்திய, மாநில அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, பண மோசடி நடக்கிறது. ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறும் நபர்கள், போலியாக பணி நியமன ஆணைகளை தருகின்றனர். சமீபத்தில், இந்த போலி ஆணை வாயிலாக வேலையில் சேர சென்ற, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், வடமாநிலத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தவறில்லை என்பதால் மீட்டுள்ளோம்; மோசடி நபரையும் பிடித்து கொடுத்தோம்.

அங்கயும் கூட, நம்மாளுங்க தான் ரயில் ஏறிப் போய் ஏமாந்திருக்காங்க பாருங்க... இந்த விஷயத்துல வடமாநிலத்தவர் உஷாரா தான் இருக்காங்க!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:
தான் தவறான எண்ணத்துடன் கூறவில்லை என, அவரே விளக்கம் அளித்த பின்னரும், ராகுல் போன்ற தலைவரை, அவரதுபேச்சுக்காக தண்டித்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது; இதுவரை நாம் பார்த்திராத ஒன்று. எதிர்க்கட்சிகளை குறிவைத்து வந்த பா.ஜ.,வின் போக்கு, தற்போது ஜனநாயக உரிமைகளையே காலில் போட்டு நசுக்குவதில் வந்து முடிந்திருக்கிறது. இத்தகைய அக்கிரமங்கள் விரைவில் முடிவுக்கு வரும். சகோதரர் ராகுலுடன் தொலைபேசியில் பேசி, ஆதரவை தெரிவித்திருக்கிறேன். இறுதியில் நீதியே வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.
என்னங்க இது அநியாயமா இருக்குது... ராகுலை தண்டிச்சது,நீதிமன்றம்... அதுக்கும், பா.ஜ.,வுக்கும் என்ன சம்பந்தம்... இதுவே, அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருந்தா, 'நீதி வென்றது'ன்னு தானே முழங்கியிருப்பீங்க!
மக்கள் நீதி மய்யம் மாநில செயலர் முரளி அப்பாஸ் அறிக்கை:
இத்தனை ஆண்டுகளில், ஜாதி ஒழியா விட்டாலும், ஜாதிப் பெயரை பெயருக்குப் பின் போட்டுக் கொள்வதில் ஒரு கூச்சமிருந்தது. இப்போது அதையும் ஒழித்து, மீண்டும் ஜாதிப் பெயரை போட்டுக் கொள்ள, நியாயம் தேடி கிளம்பியிருக்கிறது ஒரு கூட்டம்; கவனம் மக்களே!
'வேலு நாயக்கராகவும், தேவர் மகனாகவும்' படங்களில் நடிச்சவரின் கட்சியில இருக்கிறவர், இதைச் சொல்வது தான் இடிக்குது!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் இடங்களில், நடமாடும் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனினும், இந்தத் துறை சரியாக தன் பணிகளை செய்யாததன் காரணமாக, பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. பட்டாசு தொழிற்சாலைகளில், தகுதி வாய்ந்த வேதியியலர் பணி அமர்த்தப்படுவதை, உறுதி செய்ய வேண்டும். காலியிடங்கள் இருந்தால், அவற்றை நிரப்ப வேண்டும்.

ஒவ்வொரு பட்டாசு ஆலை விபத்து நடக்கிறப்பவும், இது பற்றி பேசுவதும், அதன்பின் அவற்றை மறந்து விடுவதும் வாடிக்கையாக இருக்கும் வரை, இந்த சோகங்களை தடுக்க முடியாது!