கோவை: ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில், ஆறு பேருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கோவை ராமநாதபுரத்தில், 'ஒயிட்காலர்' என்ற ஆன்லைன் நிதி நிறுவனம், 2017-18ல் செயல்பட்டு வந்தது. 1.10 லட்சம் ரூபாய் முதலீடு செய்வோருக்கு, 15 மாதத்தில் 2.25 லட்சம் ரூபாயும், மற்றொரு திட்டத்தில், 1.10 லட்சம் முதலீடு செய்தால், வாரம் 4,000 ரூபாய் வீதம், 50 வாரத்தில், இரண்டு லட்சம் ரூபாய் திருப்பி தருவதாகவும் அறிவித்தனர்.
அதிக வாடிக்கையாளர்களை சேர்த்து விடுவோருக்கு, தங்க காசு, 'டிவி', கார் உள்ளிட்ட பரிசு தருவதாக ஆசை வார்த்தை கூறினர். இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்தனர். ஆனால், அறிவித்தப்படி பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்தனர். பாதிக்கப்பட்டவர்களில், ஐந்து பேர் தங்களிடம், 63.72 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்தனர்.
கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, அந்நிறுவனத்தை நடத்தி வந்த, சுந்தராபுரம், மதுக்கரை ரோட்டை சேர்ந்த சிவகுமார்,44, அவரது மனைவி விமலா,37, சரவணம்பட்டியை சேர்ந்த முருகேசன்,46, அவரது மனைவி பிரியா,41, ஈரோட்டை சேர்ந்த லட்சுமி,55, தீபா,36 ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது, கோவை 'டான்பிட்' கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி ரவி, குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கும், 10 ஆண்டு சிறை தண்டனை, 72 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
அபராத தொகையில், 63 லட்சத்து 72 ஆயிரத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் கண்ணன் ஆஜரானார்.