கோவை: காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வது தொடர்பாக, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,'' என, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளால் விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி தர வேண்டுமென, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கேரள அரசு அம்மாநிலத்தில், காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி அளித்திருப்பதால், அதை ஆதாரமாகக் கொண்டு, கோவையிலும் அனுமதி கொடுக்க வேண்டுமென, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் பதிலளிக்கையில், ''காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வது தொடர்பாக, வன ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்டு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசு கொள்கை முடிவெடுத்து அறிவிக்கும்,'' என்றார்.