புதுடில்லி: ரயில்வேயில் பணி ஒதுக்க நிலத்தை லஞ்சாமாக பெற்ற வழக்கில், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி சிபிஐ முன் விசாரணைக்கு இன்று(மார்ச் 25) ஆஜரானார்.

பீஹார் முன்னாள் முதல்வரான ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், 2004 - 2009ல் காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக, நிலங்களை லஞ்சமாக வாங்கியதாக லாலு பிரசாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக, தேஜஸ்வி யாதவின் டில்லி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சில வாரங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.

லாலுவின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ராப்ரி தேவி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு தேஜஸ்விற்கு, சிபிஐ சம்மன் அனுப்பியது. அப்போது, விசாரணைக்கு ஆஜராக, சில நாட்கள் தேஜஸ்வி அவகாசம் கோரியிருந்தார்.
அதையடுத்து, இன்று(மார்ச் 25) விசாரணைக்கு ஆஜராகுமாறு தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன் படி, பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜரானார். லாலுவின் மகள் மிசா பாரதியும் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.