வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: எம்.பி., பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல் வெற்றி பெற்ற வயநாட்டில், காங்கிரசார் கறுப்பு நாளாக அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அதனை தள்ளிவிட்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

டில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், இளைஞர் காங்கிரசார் ராகுல் முகமூடி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். '' உண்மைக்காக ராகுல் தொடர்ந்து போராடுவார் '' என்ற பதாகைகளுடன் வந்து போராட்டம் செய்தனர்.

சண்டிகர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார், டில்லி - சண்டிகர் இடையிலான ரயிலை மறித்து போராட்டம் செய்தனர். இதனால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ம.பி., மாநிலம் போபாலில் வாயில் கறுப்புத்துணி கட்டி பூட்டு போட்டு போராட்டத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டனர்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் மற்றும் ஜார்க்கண்டில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்த காங்கிரசார், அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

ராகுலின் செல்வாக்கை பார்த்து மத்திய அரசு பயப்படுகிறது என குற்றம்சாட்டினர்.

மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், சட்டசபை வாயிலில் மஹா விகாஸ் அகாதி கூட்டணி கட்சியினர் தர்ணா ஈடுபட்டனர். வாயில் கறுப்புத்துணி கட்சி போராட்டம் நடத்தியவர்கள், ஜனநாயகம் இறந்துவிட்டது என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தினர்.

மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.