வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை : மதுரை விமான நிலையம், ஏப்ரல் 24ம் தேதி முதல், 24 மணிநேரமும் இயங்க உள்ளது.

மதுரை விமான நிலையம், 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு விமான போக்குவரத்து உள்ள நிலையில், சர்வதேச நிலையமாக மாற்ற வேண்டும்.
அதற்கேற்ப, விமான நிலையத்தை, விரிவுபடுத்த வேண்டும் என, தென்மாவட்ட பயணியர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விரிவாக்க பணிகளுக்காக, 15 கி.மீ., சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கிவிட்டது. ரன்வேயின் நீளத்தை 2 கி.மீ., அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்கான நில எடுப்பு பணிகளும் முடிந்துள்ளன. அதற்கேற்ப, மதுரை -- திருமங்கலம் ரிங்ரோட்டை மாற்றி அமைக்க வேண்டும்.
தற்போது, காலை, 6:30 மணிமுதல் இரவு, 9:00 மணி வரை இயங்கும், இந்த விமான நிலையத்திற்கு தினசரி, 15 விமானங்கள் வந்து செல்கின்றன.
இலங்கை, துபாய், சிங்கப்பூர் தவிர, மற்ற நாடுகளுக்கு இங்கிருந்து, விமானங்கள் இயக்கப்படுவதில்லை. இந்த விமான நிலையம், 24 மணிநேரமும் செயல்படும் விதமாக, தரம் உயர்த்தப்படும் என, லோக்சபாவில் அறிவிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, ஏப்.,24 முதல், விமான நிலையம், 24 மணிநேரமும் செயல்படும் என, விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதற்கேற்ப, அனைத்து பிரிவுகளிலும் ஊழியர்கள் கூடுதலாக நியமனம் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு ஆகியவை அதிகரிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
24 மணிநேரமும் இயங்க உள்ளதால், இரவிலும் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்ல, வாய்ப்புகள் ஏற்படும். மத்திய அரசின் இந்த அறிவிப்பை, பொது மக்கள், தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.