புதுடில்லி : 'அக்னிபத்' திட்டத்தில், கடற்படையில் சேர்க்கப்பட்டு, பயிற்சி முடித்துள்ள, முதல் பேட்ச் வீரர்களின் அணிவகுப்பு, மார்ச்.,28ம் தேதி ஒடிசாவில் உள்ள ஐ.என்.எஸ்., சில்கா பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.
ராணுவம், விமானம் மற்றும் கடற்படைகளில் ஆட்சேர்ப்புக்கான, அக்னிபத் திட்டத்தை, கடந்த ஆண்டு ஜூன் மாதம், மத்திய அரசு அறிவித்தது.
இத்திட்டத்தில், முப்படைகளிலும் வீரர்கள் சேர்க்கப்பட்டு, பயிற்சி பெற்று வந்த நிலையில், கடற்படையில் சேர்க்கப்பட்டு, பயிற்சி பெற்று வந்த, முதல் பேட்ச் வீரர்களின் அணிவகுப்பு, வரும் மார்ச்., 28ம் தேதி நடைபெற உள்ளது.
வழக்கமாக பகல் நேரங்களில், ராணுவ படைவீரர்களின் அணிவகுப்பு நடைபெறும் நிலையில், இந்த அணிவகுப்பு, 28ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஒடிசாவில் உள்ள ஐ.என்.எஸ்., சில்கா பயிற்சி மையத்தில், 273 பெண் வீரர்களுடன் சேர்த்து, 2,600 அக்னிவீரர்கள் கல்வி, சேவை மற்றும் வெளிப்புற பயிற்சிகளுடன், கடற்படையின் மரியாதை, கடமை மற்றும் தைரியம் ஆகியவை குறித்த,16 வார கால அடிப்படை பயிற்சியை முடித்துள்ளனர்.
![]()
|
இதில், தேர்ச்சி பெற்றுள்ள வீரர்கள், கடல் பயிற்சிக்காக போர்க்கப்பல்களில் நிறுத்தப்படுவர்.
இந்த அணிவகுப்பு, கடற்படையின் 'யூ-டியூப் சேனல்' மற்றும் சமூக வலைதள பக்கங்களிலும், துார்தஷன் டி.வி., சேனலிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இந்த அணிவகுப்பின்போது, தகுதியான வீரர்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். நடப்பாண்டு முதல், மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் நினைவாக, புதிய கோப்பை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது, 'மகளிர் அக்னிவீரரங்கனை' பிரிவில், முதலிடம் பெறும் வீராங்கனைக்கு, பிபின் ராவத் மகள்களால் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், கடற்படை தளபதி ஹரிகுமார், தலைமை விருந்தினராகவும், மதிப்பாய்வு அதிகாரியாகவும் கலந்து கொள்ள உள்ளார்.
மேலும், ஓய்வுபெற்ற கடற்படை வீரர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர், ராஜ்யசபா எம்.பி., பி.டி. உஷா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள்
![]()
|
கேப்டன், மிதாலி ராஜ், கடற்படை துணை அட்மிரல் ஹம்பிஹோலி மற்றும் கடற்படை மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தாண்டு ஜன.,26ல் நடந்த, குடியரசு தினவிழா, கடற்படை அணிவகுப்பில், அக்னிவீரர்களும் கலந்து கொண்ட நிலையில், இந்த அணிவகுப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.