திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிறந்த ஏழு நாட்களான ஆண் குழந்தையை இளம்பெண் கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் தாராபுரம் ரோடு செரங்காட்டை சேர்ந்தவர் கோபி, 34; பனியன் நிறுவனத்தில் அயர்னிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா, 30. சமீபத்தில் கர்ப்பமடைந்தார். நிறை மாதம் கர்ப்பிணியான சத்யாவுக்கு, கடந்த, 19ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சத்யாவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய ஆப்ரேசன் தியேட்டருக்கு அழைத்து சென்ற போது, இரு நாட்களாக உதவி செய்து வந்த இளம்பெண் ஒருவர் குழந்தையை கடத்தி சென்றார். இதுகுறித்து தகவலின் பேரில், கே.வி.ஆர்., நகர் உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் மருத்துவமனையில் 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.
ஆட்டோவில் கடத்தல்
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:குழந்தை பிறந்த பின், சத்யாவையும், குழந்தையும் அவரது மாமியார் உடனிருந்து கவனித்து வந்தார். இரு நாட்களுக்கு முன், 35 வயது மதிக்க கர்ப்பிணி பெண் ஒருவர் சத்யாவுக்கு அறிமுகமாகி பேசி வந்தார். உறவு பெண் ஒருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். அவ்வப்போது, சத்யாவுக்கு உதவியபடி குழந்தையை பார்த்து வந்தார். இன்று மாலை, 5:30 மணியளவில், சத்யாவை குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேசன் தியேட்டருக்கு அழைத்து செல்லும் போது, அப்பெண் குழந்தையை எடுத்து வந்தார். பின், குழந்தையுடன் மாயமானார்.
'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்ட போது, அப்பெண் கர்ப்பிணியா அல்லது கர்ப்பிணி போன்று குழந்தையை கடத்தி சென்றாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி ஆட்டோவில் தப்பி சென்றார். அப்பெண் குறித்து போலீசார் விசாரித்து தேடி வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இன்று (25.03.23)மாலை 5.30 மணி அளவில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்து ஐந்து நாளான குழந்தையை மேலே புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் புகார்தாரரின் மாமியாரிடம் இருந்து, தாங்கள் வயதானவர் குழந்தையை தூக்கி கீழே வர முடியாது என்று கூறி குழந்தையை பெற்று கடத்தி சென்றதாக தெரிய வருகிறது எனவே மேலே கண்ட புகைப்படத்தில் உள்ள நபர் பற்றி தகவல் ஏதேனும் இருப்பின் கீழே கண்ட தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. 9498101307,9498181209,