பல்லடம்:வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம், சூலுார் அருகே சந்தமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த மகன் பஞ்சலிங்கம் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது தாய் தனலட்சுமி என்பவருக்கும் இடையே கடந்த, 22ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சுல்தான்பேட்டை ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., ரவிச்சந்திரன், பஞ்சலிங்கத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஜெயபிரகாஷ் புகார் அளித்திருப்பதாகவும் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் பஞ்சலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
இதனால், சுல்தான்பேட்டை ஸ்டேஷன் சென்ற பஞ்சலிங்கத்திடம், சி.எஸ்.ஆர்., மட்டும் போட்டு, வழக்குப்பதிவு செய்யாமல் காப்பாற்றுவதாகவும், இதற்காக, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மாலை வந்து தருவதாக கூறி சென்ற பஞ்சலிங்கம், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய, 4 ஆயிரம் ரூபாயை, எஸ்.எஸ்.ஐ., ரவிச்சந்திரனிடம் பஞ்சலிங்கம் கொடுத்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரவிச்சந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.