சோழவரம்: சோழவரம் அடுத்த, செம்புலிவரம் பகுதியில், சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் சர்வஸ் சாலை உள்ளது. சமீபத்தில் இந்த சர்வீஸ் சாலை விரிவுப்படுத்தப்பட்டு, தார்சாலை அமைக்கப்பட்டது.
அங்குள்ள உயர் அழுத்த மின் கம்பத்தினை, சாலையோரம் மாற்றம் செய்யாமல், சாலை அமைக்கப்பட்டு உள்ளதால், அது போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறாக உள்ளது.
சர்வீஸ் சாலையின் மத்தியில் மின் கம்பம் இருப்பதால் வாகன ஓட்டிகள் வலது, இடது என மாறி, மாறி பயணிக்கின்றனர்.
கனரக வாகனங்கள் மின் கம்பம் உள்ள பகுதியை கடக்கும்போது சிரமத்திற்கு ஆளாகின்றன. அவை மின் கம்பத்தில் உரசினால் மின் விபத்துக்களுக்கும் வாய்ப்பு உள்ளது.
இரவு நேரங்களில் மின் கம்பம் இருப்பதை அருகில் வந்து கவனித்து, வாகனத்தை திருப்பும்போது தடுமாற்றமும் அடைகின்றனர்.
இதனால் வாகனங்கள் மின் கம்பத்தில் மோதி விபத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது. மேற்கண்ட சர்வீஸ் சாலை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தினை மாற்றம் செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.