வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை-'மஹாத்மா காந்தியிடம் பல்கலைக்கழக பட்டம் ஒன்று கூட இல்லை' என ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி, இதை மறுத்துள்ளார்.
![]()
|
மத்திய பிரதேசம் குவாலியரில் உள்ள இந்திய தொழில்நுட்ப மேலாண்மை கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஜம்மு -- காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா சமீபத்தில் பங்கேற்றார்.
டாக்டர் ராம் மனோகர் நினைவு சொற்பொழிவின் போது பேசிய அவர், 'மஹாத்மா காந்தியிடம் ஒரு பல்கலைக்கழக பட்டம் கூட இல்லை.
'அவர் உயர் கல்வியில் டிப்ளமா மட்டுமே முடித்துள்ளார். நம்மில் பலர் மஹாத்மா காந்தி, சட்டப் பாடத்தில் பட்டம் பெற்றதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்; அது உண்மையில்லை' என கூறியிருந்தார்.
இந்நிலையில், மனோஜ் சின்ஹா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, இவரின் கருத்தை மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் தன் சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:
மஹாத்மா காந்தி இரண்டு மெட்ரிக் கல்வி பயின்றுள்ளார். ராஜ்கோட் ஆல்பிரட் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றும், பிரிட்டன் மெட்ரிக் பள்ளியில் மற்றொன்றும் பெற்றுஉள்ளார்.
![]()
|
லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சட்டக் கல்லுாரியான 'இன்னர் டெம்பிள்' நிறுவனத்தில் சட்டப் பட்டம் பயின்று தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதுடன், ஒரே நேரத்தில் லத்தீன் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் இரண்டு டிப்ளமாக்களை அவர் பெற்றுள்ளார்.
காந்தியின் சுயசரிதை புத்தகத்தை கவர்னர் மாளிகைக்கு அனுப்பியுள்ளேன். கவர்னருக்கு படிக்கத் தெரிந்தால், இது குறித்து படித்து தெரிந்து கொள்ளட்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ஆனால், முழுமையான சட்டப் படிப்பில் மஹாத்மா காந்தி பட்டம் பெறவில்லை என்பதை மற்றொரு பதிவில் துஷார் காந்தி ஒப்புக் கொண்டுஉள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement