வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு-விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள கர்நாடகாவில், தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்களில், 95 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும், 35 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் மீதான கிரிமினல் வழக்குகளை வெளிப்படையாக அறிவித்துள்ளனர் என்றும், ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
![]()
|
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள இந்த மாநிலத்திற்கு, வரும் மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
இதற்கான தேதியை, தலைமைத் தேர்தல் கமிஷன் வரும் வாரத்தில் அறிவிக்க உள்ளது.
இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில், ஆளும், பா.ஜ., அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முயற்சியில் எதிர்க்கட்சியான காங்கிரசும் பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் தற்போதைய எம்.எல்.ஏ.,க்களில் 95 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்றும், 35 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் மீதான கிரிமினல் வழக்குகளை வெளிப்படையாக அறிவித்துள்ளனர் என்றும், ஏ.டி.ஆர்., அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கர்நாடகாவில் உள்ள, 224 எம்.எல்.ஏ.,க்களில், 219 பேரின் குற்றவியல், நிதி மற்றும் பிற பின்னணி விபரங்களை சமீபத்தில் ஆய்வு செய்தோம்.
இதன்படி, 2018 சட்டசபைத் தேர்தலுக்குப் பின் 10 காங்., - எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 15 எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறினர். தற்போது அவர்கள், பா.ஜ.,வில் உள்ளனர்.
பிரமாணப் பத்திரங்களில், தங்களுக்கு எதிராக உள்ள கடுமையான கிரிமினல் வழக்குகளை, 26 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் அறிவித்துள்ளனர்.
இதில், அதிகபட்ச எண்ணிக்கையுடன் பா.ஜ., முதலிடத்தில் உள்ளது. அடுத்து, பா.ஜ.,வின், 118 எம்.எல்.ஏ.,க்களில், 112 பேர் கோடீஸ்வரர்கள். ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு, 29.85 கோடி ரூபாய்.
இந்த பட்டியலில், சராசரி சொத்து மதிப்பு, 48.58 கோடி ரூபாயுடன், காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 118 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள, பா.ஜ.,வில், ஒரு எம்.எல்.ஏ.,வின் சராசரி சொத்து, 19.6 கோடி ரூபாயாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்களின் சராசரி சொத்து மதிப்பு, 4.34 கோடி ரூபாயாகவும், நான்கு சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களின் சராசரி சொத்து, 40.92 கோடி ரூபாயாகவும் உள்ளது.
பா.ஜ.,வின், 112 எம்.எல்.ஏ.,க்களில், 49 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
காங்கிரசின், 67 எம்.எல்.ஏ.,க்களில், 16 பேர் மீதும், ம.ஜ.த.,வின் 30 எம்.எல்.ஏ.,க்களில், 9 பேர் மீதும், 4 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களில், 2 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.
![]()
|
பா.ஜ.,வைச் சேர்ந்த, 35 எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசைச் சேர்ந்த, 13 மற்றும் ம.ஜ.த.,வைச் சேர்ந்த, 8 எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்தத் தலைவரும், கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.,வுமான டி.கே.சிவகுமார், அதிக பட்சமாக, 840 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளார்.
அடுத்தபடியாக, காங்கிரசைச் சேர்ந்த, பி.எஸ்.சுரேஷ், எம்.கிருஷ்ணப்பா ஆகியோர், முறையே, 416 கோடி ரூபாய் மற்றும் 236 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
மொத்தமுள்ள, 219 எம்.எல்.ஏ.,க்களில், 73 பேர் 12ம் வகுப்பு வரை படித்திருப்பதாக அறிவித்துள்ளனர். 140 எம்.எல்.ஏ.,க்கள் பட்டதாரிகளாகவும், இரண்டு எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் பட்டம் பெற்றவர்களாகவும் உள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement