வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜம்மு-அரசின் கொள்கைகளை, நடவடிக்கைகளை விமர்சித்து, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டால், பணி நீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என, ஜம்மு - காஷ்மீர் அரசு ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
![]()
|
ஜம்மு - காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், துணை நிலை கவர்னர், வி.கே.சக்சேனா தலைமையிலான நிர்வாகம் அதை நிர்வகித்து வருகிறது.
பயங்கரவாதிகளுடன் தொடர்பு, பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ள அரசு ஊழியர்களுக்கு எதிராக, ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
எச்சரிக்கை
இருந்தும் கூட அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள், நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிராக, பல அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் பொது நிர்வாகத் துறையின் கமிஷனர் செயலர் சஞ்சீவ் வர்மா, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்து, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அரசின் இந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஜம்மு - காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இதன்படி, அரசு ஊழியர்கள், அரசின் கொள்கை முடிவுகள், எடுக்கும் நடவடிக்கைகளை விமர்சிக்கக் கூடாது.
தற்போது இதில் சில புதிய பிரிவுகள் சேர்க்கப்படுகின்றன. இதன்படி, சமூக வலைதளங்களில், அரசுக்கு எதிரான விமர்சன பதிவுகளை வெளியிடக் கூடாது. மற்றவர்கள் பதிவிடும் செய்திகளை மறுவெளியீடு செய்வது, அதற்கு விருப்பம் தெரிவிப்பது போன்றவற்றிலும் அரசு ஊழியர்கள் ஈடுபடக் கூடாது.
சமூக வலைதளம்
இதுபோல, அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் சமூக வலைதள குழுக்களில் இடம் பெறக் கூடாது. சமூக வலைதளத்தில், அரசுக்கு எதிரான கருத்துக்கள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்கக் கூடாது.
இதை மீறும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
![]()
|
அபராதம் விதிப்பது, ஒரு மாத சம்பளம் பிடித்தம் செய்வது, பதவி உயர்வு நிறுத்தப்படுவது, சம்பள உயர்வு நிறுத்தப்படுவது, பதவியிறக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும், பணி நீக்கம் போன்ற நடவடிக்கையும் எடுக்க நேரிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜம்மு - காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்படும் ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.அடுத்தாண்டு துவக்கத்தில், நாட்டின் மற்ற பகுதிகளுடன், காஷ்மீர் பள்ளத்தாக்கு இணைக்கப்படும். உதம்பூர் - பனிஹால் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இது முடிந்தவுடன், உதம்பூர் - பாராமுல்லா மார்க்கத்தில் ரயில்கள் இயக்க முடியும்.இந்த மார்க்கத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள, 'வந்தே பாரத்' ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தொலைதொடர்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், 500 புதிய 'மொபைல் போன் டவர்'கள் நிறுவப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.