வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:... ......
என்.தொல்காப்பியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் செயல்களை செய்யாதீர்கள்; தி.மு.க., நிர்வாகிகளால், கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படாதவாறு, மாவட்டச் செயலர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். சில இடங்களில் வருந்தத்தக்க செயல்கள் நடக்கின்றன; அவற்றை அனுமதிக்காதீர்கள். தேவையில்லாத பிரச்னைகளை பேசாதீர்கள்' என, தன் கட்சித் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், வண்டி வண்டியாக அறிவுரைகளை வாரி வழங்கி இருக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.
![]()
|
எப்போதெல்லாம் முதல்வர் தன் கட்சியினருக்கு, 'அட்வைஸ்' செய்கிறாரோ, அப்போதெல்லாம், தி.மு.க.,வினர் வரம்பு மீறிப் பேசுவதும், அடிதடிகளில் இறங்குவதும் தொடர்கதையாகி வருவதை நாம் பார்க்கிறோம்.
'கட் அவுட்கள், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்காதீர்கள்...' என்று, கட்சித் தலைமை எச்சரித்தால், உடனே முன்பையை விட பல மடங்கு அதிகமாக வைக்கின்றனர். 'அடாவடி பேச்சுகளை தவிருங்கள்' என்று சொன்னால், அப்போது தான், தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி போன்றோர் ஆவேசமாக பேசுகின்றனர்; 'பா.ஜ.,வினர் உயிரோடு இருக்க மாட்டார்கள்' என்றும் மிரட்டல் விடுக்கின்றனர்.
அதேபோல, சொந்தக் கட்சியினராக இருந்தாலும், அடிதடிகளை செவ்வனே செய்து முடிப்பதில் வல்லவர்களாக இருக்கின்றனர், அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள்.
'மக்கள் தரும் மனுக்களை வெறும் காகிதமாக பார்க்காதீர்கள்; அவற்றை, மக்களின் வாழ்க்கையாக பாருங்கள்' என்று, முதல்வர் அறிவுரை கூறிய பின் தான், மனு கொடுக்க வந்த பெண்ணை, அந்த மனுவாலேயே தலையில் அடித்து மகிழ்கின்றனர் கழக அமைச்சர்கள்.
பஸ்சில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களை, 'ஓசி கிராக்கி'கள் என்று, கிண்டலடித்து ஆனந்தம் அடைந்த தமிழக அமைச்சர்கள், இனி, மாதம், ௧,௦௦௦ ரூபாய் உரிமைத் தொகை பெற உள்ள பெண்களை, என்ன சொல்லி கேலி செய்வரோ தெரியவில்லை.
தன்னால் நிம்மதியாக துாங்க முடியவில்லை என்று முதல்வர் சொன்ன பிறகும், அதை, தி.மு.க., அமைச்சர்களும், நிர்வாகிகளும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. முதல்வரின் அறிவுரை, தி.மு.க.,வினருக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி தான்.
![]()
|
கருணாநிதி காலத்தில், தி.மு.க., முழுக்க முழுக்க அவரது கட்டுப்பாட்டில் இருந்தது; இப்போது யார் கட்டுப்பாட்டில், தி.மு.க.,வினர் உள்ளனர் என்பதே தெரியவில்லை. அந்த அளவுக்கு நிலை மோசமாக உள்ளது.
'என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே...' என்று, முன்னர் கருணாநிதி பேசுவார்; கடிதம் எழுதுவார். இனி, 'என் உயிரை எடுக்கும் உடன்பிறப்புக்களே... என் நிம்மதியை கெடுக்கும் உடன்பிறப்புக்களே...' என்று, ஸ்டாலின் கடிதம் எழுதுவதே, பேசுவதே சரியாக இருக்கும்.