வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''கான்ட்ராக்டர்களை புலம்ப விட்டுட்டாவ வே...'' என்றபடியே, டீயை அருந்தினார் அண்ணாச்சி.
''ஏன், என்னாச்சுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''போன 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடந்துச்சுல்லா... அப்ப, திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க, 'ஸ்ட்ராங் ரூம்' அமைச்சாவ...
![]()
|
''அதோட, ஓட்டுச்சாவடிகள்ல சாய்வு தளம் அமைக்கிறது உட்பட, ஏகப்பட்ட வேலைகளை பொதுப்பணித் துறை கான்ட்ராக்டர்கள் செஞ்சாவ... ஆனா, அடுத்த லோக்சபா தேர்தல் நெருங்குற சூழல்லயும், இன்னும், கான்ட்ராக்டர்களுக்கு பல லட்சம் ரூபாய், 'பில்' வரவே இல்லவே...
''தலைமைச் செயலகத்துக்கு நடையா நடந்தும் துட்டு வரமாட்டேங்குது... 'அ.தி.மு.க., ஆட்சியில தான் அப்படின்னா, தி.மு.க., ஆட்சிக்கு வந்து ரெண்டு வருஷமாகியும்,காசு கைக்கு வரலையே'ன்னு கான்ட்ராக்டர்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''வேலியே பயிரை மேயுது பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் அன்வர்பாய்.
''பூடகமா சொல்லாம, 'டைரக்டா' விஷயத்துக்கு வாரும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''துாத்துக்குடியில போலீஸ்காரங்க சிலரது நடவடிக்கை, பொதுமக்களை முகம் சுளிக்க வைக்குது... அந்த மாவட்ட எஸ்.பி., தனிப் பிரிவுல இருக்கிற அதிகாரிகள் எல்லாம், பல வருஷமா ஒரே இடத்துல, 'டேரா' போட்டிருக்காங்க பா...
''வருமானத்துக்கு ஆசைப்பட்டு குற்றவாளிகளோட கூட்டணிபோட்டு, குற்றச் செயல்களுக்கு துணை போறாங்க... குற்றச்சாட்டுகள்ல சிக்கி எஸ்.பி.,யால துாக்கி அடிக்கப்பட்டவங்க கூட, மேலிட சிபாரிசு மூலமா, திரும்ப அதே இடத்துக்கு வந்துடுறாங்க பா...
''இதனால, 'டி.எஸ்.பி.,ஆபீஸ்ல அஞ்சு வருஷத்துக்கு மேல ஒருத்தர் பணி செய்ய தடை விதிக்கணும்... ஏட்டா இருந்து, சிறப்பு எஸ்.ஐ.,யாகவும்,எஸ்.ஐ.,யாகவும் புரமோஷன் வாங்குறவங்க, ஒரே இடத்துல தொடர்ந்து பணி செய்றதை தடுத்தாலே, பாதி குற்றங்களை குறைச்சிடலாம்'னு சமூக ஆர்வலர்கள் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''சம்பளத்துக்கு ஆள் போட்டு லஞ்சம் வசூலிக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''வேலுார் மாவட்டம், குடியாத்தம் நில அளவையர் ஆபீஸ்ல, விவசாயி ஒருத்தரிடம், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையர் விஜய் கிருஷ்ணா, அவரோட தனிப்பட்ட உதவியாளர் கலைவாணனை, சமீபத்துல லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது பண்ணாளோல்லியோ...
''விசாரணையில, அவா சொன்ன தகவல்களைக் கேட்டு, போலீசாரே அசந்துட்டான்னா பாரும்... அதாவது, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்கள்ல இருக்கற, 15 நில அளவையர் ஆபீஸ் அதிகாரிகள் சிலர், லஞ்ச வசூலுக்காகவே தனிப்பட்ட முறையில ஆட்களை, 'அப்பாயின்ட்' செஞ்சிருக்கா ஓய்...
''நிலத்தின் மதிப்புக்கு தக்கபடி, 15 ஆயிரத்துலஇருந்து, 2 லட்சம் ரூபாய் வரை, 'மொய்' எழுதணும்... இந்த பணத்தை வசூலிச்சு தரவாளுக்கு, மாசம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளமும், லஞ்ச வசூலுக்கு ஏற்ப, 'இன்சென்டிவ்'வும் தரா ஓய்...
''இப்படி ஏகப்பட்ட விபரங்களை அவாளிடம்கறந்துட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், தொடர் கண்காணிப்புல இறங்கியிருக்கா... சீக்கிரமே நிறைய திமிங்கிலங்கள் சிக்கும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''குடிநீர் வடிகால் வாரியத்தை, ஒரு துறையின் கீழ் கொண்டு வரணும்னு கேட்கிறாங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை பருகினார் அன்வர்பாய்.
''யாருங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் எல்லாம், முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு மனு அனுப்பியிருக்காங்க...
''அதுல, 'பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், இனி பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும்னு அறிவிச்சாங்கல்ல... அதே மாதிரி, குடிநீர் வடிகால் வாரியத்தையும் ஒரே துறையில கொண்டு வரணும்'னு கேட்டிருக்காங்க பா...
''ஏன்னா, 'தமிழகத்துல, குடிநீர் வடிகால் வாரியத்தை, 52 வருஷத்துக்கு முன்னாடி முதல்வரா இருந்த கருணாநிதி தான் அமைச்சாரு... ஆனா, இப்ப அரசின் பல துறைகளும் குடிநீர் திட்டங்களை, தனித்தனியா செயல்படுத்துறதால, வாரியத்தின் பணிகள் சுருங்கிடுச்சு பா...
''ஊழியர்களுக்கு ஊதியம், ஓய்வூதியர்களுக்கு 'பென்ஷன்' வழங்க முடியாம, வாரியம் தடுமாறுது... இதனால, எல்லா குடிநீர் திட்டங்களையும், வாரியமே செயல்படுத்தும்னு, இந்த சட்டசபை கூட்டத் தொடர்லயே அறிவிக்கணும்'னு அதுல கேட்டிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கலெக்டர் உத்தரவை மதிக்கவே மாட்டேங்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''எந்த மாவட்ட விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''சேலம் மாவட்டம், செந்தாரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருத்தர், தனக்கு நிறுத்தப்பட்ட பிரதமர் நிதியுதவியை கேட்டு, கெங்கவல்லி வேளாண் அலுவலகத்துல, 30 முறைக்கு மேல மனு குடுத்தும், பலன் இல்ல... சேலத்துல இருக்கிற வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்துக்கு, மூணு வருஷமா நடையா நடந்தும், அவரது பிரச்னை தீரல வே...
![]()
|
''இதனால, கலெக்டர் தலைமையில நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்துல, அந்த விவசாயி குமுறி தள்ளிட்டாரு... 'டென்ஷன்' ஆன கலெக்டர், சம்பந்தப்பட்ட வேளாண் அலுவலரை உடனே, 'சஸ்பெண்ட்' பண்ணச் சொல்லியிருக்காரு வே...
''ஆனா, வேளாண் இணை அதிகாரி, அதை மதிக்கவே இல்ல... இந்த மாதிரி நிறைய விவசாயிகள் பாதிக்கப்பட்டும், அதிகாரி எதையும் கண்டுக்காம இருக்கிறதால, அவர் மேல கலெக்டர் கடும் அதிருப்தியில இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''சிங்காரம், இந்த பேப்பரை அங்க வையும்...'' என்ற குப்பண்ணாவே, ''மதுரைக்கு வர வேண்டிய ரயிலை, கோவைக்கு தள்ளிண்டு போயிட்டா ஓய்...'' என்றார்.
''விளக்கமா சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் ஏற்கனவே ஓடிண்டு இருக்கோல்லியோ... அடுத்து, சென்னை - கோவைக்கான ரயிலை, ஏப்ரல், 8ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கறார் ஓய்...
''முதல்ல, இந்த ரயிலை சென்னை - மதுரைக்கு தான் இயக்க இருந்தாளாம்... இதுக்காக, மதுரை கோட்டத்தைச் சேர்ந்த சில, 'லோகோ பைலட், டெக்னீஷியன்'களை, சிறப்பு பயிற்சிக்காக சென்னைக்கு அனுப்பி வச்சிருக்கா ஓய்...
''ஆனா, வர்ற லோக்சபா தேர்தல்ல கோவை தொகுதியை கைப்பற்றியே ஆகணும்னு, பா.ஜ.,வினர் பிளான் பண்ணியிருக்கா... அதனால, அந்தப் பகுதி மக்களை கவர்ற வகையில, ரயிலை கோவைக்கு தள்ளிண்டு போயிட்டா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''அப்படின்னா, மதுரை மக்களின் ஓட்டுகள் வேணாம்னு முடிவு பண்ணிட்டாவளா...'' எனச் சிரித்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.