வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அமெரிக்காவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகி, திடீர், திடீரென மூடப்படுவது, அந்த நாட்டுக்கான அதிர்ச்சி செய்தி மட்டுமல்ல, உலக நாடுகளுக்கான 'அலர்ட்' செய்தி. இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பங்குச்சந்தை நிபுணர் முதல் பாமரர்கள் வரை அமெரிக்க வங்கி , பங்குச்சந்தை, முதலீட்டு நிலவரங்களை கவனித்து வருகின்றனர்.

காரணம், உலக பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் அமெரிக்க டாலரின் மகிமைதான். யானை படுத்தாலும் மட்டமில்லை என்பதுபோல், வங்கிகள் வீழ்ந்தாலும், அமெரிக்காவின் டாலர்தான், சர்வதேச பரிவர்த்தனைகளில் இன்னமும் பெரும் அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அமெரிக்க வங்கிகள் சரிவை, அதனால் வரும் பாதிப்புகளை மக்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளனர். அதன் பாதிப்பு இந்திய வங்கிகளிலும் இருக்குமா என்பதும் நமது மக்களின் அச்சமாக இருக்கிறது.
சரிந்த கதை
சரி, இப்போது அமெரிக்க வங்கிகள் சரிந்த கதையை சுருக்கமாக பார்ப்போம்:
அமெரிக்காவின் தொழில்நுட்ப தலைநகரம் சிலிக்கான் வேலியில், 1983ல், புதுமை பொருளாதாரத்துக்கான வங்கியாக பிறந்தது சிலிக்கான் வேலி வங்கி (எஸ்.வி.பி.). இது அமெரிக்காவின் 16வது பெரிய வங்கியாகும். மொத்த சொத்து மதிப்பு 209 பில்லியன் டாலர் (17 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய்) என்ற பிரம்மாண்ட சொத்து மதிப்புடன், சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
கோவிட் பரவல் காலத்தில், அமெரிக்காவில் ''ஸ்டார்ட்-அப்'' நிறுவனங்களில் முதலீடு செய்ய சரியான வாய்ப்பு இல்லாததால், வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் தங்கள் பணத்தையும், ஏராளாமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தாங்கள் பெற்ற முதலீட்டுத்தொகையையும் இங்கு டெபாசிட் செய்திருந்தன. 2018 முதல் 2021 வரை வங்கியின் டெபாசிட் மூன்று மடங்கு வளர்ந்தது.
பொதுவாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் டெபாசிட் தொகைகளை, வங்கிகள் பிறருக்கு கடனாக வழங்கி, அதில் கிடைக்கும் அதிக வட்டியில் லாபத்தை அதிகப்படுத்திக்கொள்ளும். ஆனால் சிலிக்கான் வேலி வங்கி டெபாசிட் பணத்தின் பெரும் பகுதியை அரசின்நீண்டகால பத்திரங்களில் அப்போதைய 1.6% வட்டிக்கு முதலீடு செய்தது. தவிர, வீட்டுக்கடன் பத்திரங்களிலும் (mortgage based securities) முதலீடு செய்துள்ளது. அதாவது, குறுகிய கால டெபாசிட் வாங்கி, நீண்ட கால முதலீடு செய்திருப்பது பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தியது.
உதாரணமாக ஓர் ஆண்டிற்கான டெபாசிட் வாங்கி, பதினைந்து ஆண்டிற்கான முதலீடு (அதுவும் குறைந்த வட்டியில்) செய்ததுதான் பிரச்னையின் சாரம்சம். சமீபத்திய அமெரிக்காவின் பணவீக்கம், நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்ததால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ், வட்டி விகிதத்தை 2022 ஆம் ஆண்டு மட்டும் ஏழு முறை உயர்த்தியது. இந்த உயர்வு, சிலிக்கான் வேலி வங்கியின் அரசுப் பத்திரங்களின் 'போர்ட் போலியோ' மதிப்பை கடும் அளவு சரிவடைய வைத்தது. இது தவிர 1.6 சதவீத வட்டி வருமானமாகப்பெற்று, டெபாசிட்தாரர்களுக்கு அதைவிட பல மடங்கு கூடுதல் வட்டி கொடுக்க வேண்டிய நிலையில் வங்கி நட்டப்பாதைக்கு தள்ளப்படுவது நிதர்சனமானது.
மளமளவென காலி
பெடரல் வங்கியின் வட்டி உயர்வால், கடன் பத்திரங்களை வைத்திருப்பது லாபமில்லை என்று உணர்ந்த சிலிக்கான் வேலி வங்கி, 21 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்களை விற்பனை செய்தது. இதனால், பீதியடைந்த வங்கியின் வாடிக்கையாளர்கள், ஒரே நாளில் 42 பில்லியன் டாலர் (3.45 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான தொகையை திரும்ப பெற்றனர்.
மார்ச் 8ம் தேதி வங்கி திவால் நிலைக்குத் தள்ளப்பட்டது. மார்ச் 10ம் தேதி சிலிகான் வேலி வங்கியை, நிதிப்பாதுகாப்பு குழு, கைப்பற்றி பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷன் வசம் ஒப்படைத்தது. அது, முதலீட்டாளர்களின், வங்கி முதலீடு தொகைக்கு, உத்தரவாதம் கொடுக்கும் அமைப்பாகும். இதனால், இந்த வங்கியில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு, எப்படியும் தங்கள் பணம் கைக்கு வரும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரலாற்றில் இது வரை திவாலான மிகப்பெரிய வங்கிகள் என்ற பட்டியலில் இரண்டாவது இடம் பெறுவது சிலிகான் வேலி வங்கி என்பது கவனிக்கப்பட வேண்டும்.
மிக சமீபத்தில், அதாவது 2022ல் ''போர்ப்ஸ்” இதழ், ''அமெரிக்காவின் சிறந்த வங்கி'' என்ற விருதை சிலிக்கான் வேலி வங்கிக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
திவால் புதிதல்ல
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 4, 844 வங்கிகள் உள்ளன. முன்னதாக, 2008 முதல் 2012ம் ஆண்டு வரை அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி நிலவியபோது கிட்டத்தட்ட 465 வங்கிகள் திவாலானது. தற்போது சிலிக்கான் வேலியை தொடர்ந்து 'சிக்னேச்சர்' வங்கியும் மூடப்பட்டது. அது, 'கிரிப்டோ கரன்சி' வர்த்தகத்தில் முன்னணியில் இருந்தது.
பிரபல மூடீஸ் அமைப்பு மேலும் ஆறு வங்கிகள் கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான சோசியல் சயின்ஸ் ரிசர்ச் நெட்வொர்க் (எஸ்.எஸ்.ஆர்.என்.,'அமெரிக்காவின் திவால் வரிசையில் இடம் பிடிப்பதற்காக மேலும் 186 வங்கிகள் வரிசைகட்டி காத்திருப்பதாக' கூறுகிறது. இது, சர்வதேச பொருளாதார சந்தைக்கு சிறிது சங்கடமான செய்திதான்.
உலக நாடுகளின் செயல்பாடுகளில் அமெரிக்காவின் ஆய்வு நிறுவனங்கள் அவ்வப்போது மூக்கை நுழைத்து சிறப்புப்புலனாய்வு அறிக்கை கொடுப்பது வழக்கம். சமீபத்திய 'ஹிண்டன்பர்க்' அறிக்கையும் அதானி நிறுவனங்களின் குறைபாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டியதில் இந்திய பங்குச்சந்தை அதிர்வடைந்தது.
இத்தகைய நிறுவனங்கள் அமெரிக்காவில் இவ்வளவு பெரிய ஓட்டையை எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என்பது சராசரி மனிதனின் கேள்வி. இது அமெரிக்காவோடு நிற்க வில்லை. ஐரோப்பாவிலும் சில நாட்களுக்கு முன் சுவிர்சர்லாந்தின் பெரிய வங்கிகளில் ஒன்றான கிரெடிட் சுவிஸ் வங்கியின் திவாலானதைத்தொடர்ந்து அதை 'UBS வங்கி' கிரெடிட் சுவிஸ் வங்கியை காப்பாற்ற முன் வந்துள்ளது (bail out) இந்தியாவின் அணுகு முறையை உலக நாடுகள் பின் பற்றுவதைக் காண்பிக்கிறது.
டெபாசிட்டுக்கு காப்பீடு உண்டா?
அமெரிக்காவின் வங்கிகளில் டெபாசிட் செய்யும் முதலீட்டாளர்களுக்கு அதிகபட்சமாக இரண்டரை லட்சம் டாலர் வரையில் காப்பீட்டு உத்தரவாதம் வழங்கப்படுகிறது. அதாவது, எத்தனை கோடி டாலர் முதலீடு செய்தாலும், வங்கிகள் திவால், ஸ்தம்பிக்கும் நிலை வந்தால், அதிகபட்சம் இரண்டரை லட்சம் டாலர் மட்டுமே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். ஆனால் சிலிக்கான் வேலி விவகாரத்தில், டெபாசிட்தாரர்களுக்கு முழு பணத்தையும் திருப்பிக்கொடுக்கும் வகையில் செயல்பட்டிருப்பது, ஏராளமான அமெரிக்க வாழ் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் அளிக்ககூடிய ஒன்று. இந்தியாவில் நம் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் தொகை மீது காப்பீட்டு உத்தரவாதம் 5 லட்சம் ரூபாயாக உள்ளது.

இந்தியா 'ஓகே'
அமெரிக்க வங்கிகளின் நிலைமையுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் வங்கிகளின் நிலைமை மிகவும் மேம்பட்டு, பாதுகாப்பான நிலையில் உள்ளது என்று நிச்சயமாக சொல்ல முடியும். இந்திய ரிசர்வ் வங்கியும் கடந்த ஆண்டு ரெப்போ வட்டியை 5 முறை உயர்த்தியது. இதனால் வங்கி வட்டியும் அவ்வப்போது உயர நேர்ந்தது. ரெப்போ ரேட்டுக்கு இணையாக வங்கிகள் கடனுக்கும் டெபாசிட்டுக்கும் வட்டியை உயர்த்தியுள்ளன.
அதேநேரத்தில், அமெரிக்காவைப்போல் இந்தியாவில் வங்கிகளுக்கு எந்த ஒரு சூழலிலும், இதுவரை திவால் நிலை வந்தது இல்லை. எந்த ஒரு சிறிய வங்கி, நிதிச் சூழலில் சிக்கித் தடுமாறினாலும், அதை அரசு கை தூக்கி விடுகிறது. அத்துடன், எஸ்.பி.ஐ., உட்பட நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கிகள், சிறிய வங்கிகளில் முதலீடு செய்து, அவற்றை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அரசால் கேட்கப்படுகிறது. இதுபோன்ற நிலையில், இந்தியாவின் வங்கிகள் ஒருபடி மேலே என்று சொல்லும் வகையில் செயல்படுகிறது. மக்கள் நம்பிக்கையை வங்கிகள் இழக்காமல் வைத்திருப்பது ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டிற்கு ஓர் ஆதாரம்.
ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் அங்கங்கே குறைபாடுகள் அவ்வப்போது இருந்தாலும், உலக நாடுகளின் மத்திய வங்கிகளில் சிறப்பாக செயல்படும் அமைப்புகளில் ஒன்றாக ரிசர்வ் வங்கி கருதப்படுகிறது. வங்கிகளின் முதலீடு / கடன்கள் மீது ஏராளமான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்வதால், மக்கள் பணம் வங்கிகளில் பத்திரமாக இருக்கும் என்று நாம் நம்பலாம்.
மாற்று பணமாகும் கரன்சி
உலகம் நாடுகள் தங்கள் வர்த்தகத்தை அமெரிக்க டாலரில்தான் நடத்த வேண்டி இருக்கிறது. அந்த நிலையை, இப்போது இந்தியா மெல்ல கை கழுவிக் கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளுடன், டாலரில் அல்லாமல், நமது சொந்த கரன்சியில் அதாவது ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்யும் திட்டத்தை இந்தியா முன்னெடுத்துள்ளது. அதன்படி சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஜெர்மன், ரஷ்யா, ஈரான், சவுதி உட்பட 18 நாடுகள் இந்திய ரூபாயை பரிவர்த்தனை மதிப்பாக ஏற்றுக் கொள்ளத்தொடங்கியுள்ளது. இது இந்திய ரூபாய் வலுவடைந்து வருவதற்கான ஒரு சான்றாகும். டாலரின் ஆதிக்கம் குறையும் இந்தக் காலகட்டத்தில், இந்திய ரூபாயின் வளர்ச்சியும், நம் வங்கித்துறையை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, இந்திய வங்கிகளின் டெபாசிட்தாரர்கள், எந்தஒரு சூழலிலும், தங்கள் டெபாசிட் மீது கவலை கொள்ள வேண்டியதில்லை என்பதுதான் ஒரு நம்பிக்கையான செய்தி.